பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

238

வேங்கடம் முதல் குமரி வரை

தாய்தன்னை அறியாத கன்று இல்லை
தன் கன்றை
ஆயும் அறியும்; உலகின்
தாயாகி, ஐய!
நீ அறிதி எப்பொருளும்
அவை உன்னைநிலை அறியா
மாயை இது என் கொல்லோ?
வாராதேவரவல்லாய்!

என்று ஆமருவி அப்பனைப் பாடி இருக்கிறான். இனி அந்த ஆமருவி அப்பனையே காணக் கோயிலுக்குள் விரைந்து செல்லலாம். கிருஷ்ணாவதாரத்தில் கண்ணன் தன் தோழர்களுடன் பசுக்களை மேய்த்துக்கொண்டிருந்திருக்கிறான். பசுக்களை ஓரிடத்தில் விட்டு நீர் அருந்தச் சென்றிருக்கிறான். இந்த நேரத்தில் அவ்வழி வந்த பிரம்மா, பசுக்களைத் திருவழுந்தூருக்கு ஓட்டி வந்து விடுகிறார். இதைத் தெரிந்த கண்ணன் புதிதாக ஒரு பசுக்கூட்டத்தையே, உருவாக்கி யாதவர்களுக்குக் கொடுத்து விடுகிறான். பிரம்மாவும் தம் பிழையை உணர்கிறார். அவர் வேண்டிக் கொண்டபடியே, திருவழுந்தூர் சென்ற பசு நிறைகாக்கும் கோவலனாகக் கண்ணன் இங்கு வந்துவிடுகிறான். 'ஆமருவி நிரை மேய்க்கும் அமரர் கோமானாக ' அமர்கிறான். கர்ப்பக் கிருஹத்தில் இருக்கும் உற்சவரது பின்புறம் பசு ஒன்று நின்று கொண்டிருப்பது கண்கூடு. இத்துடன் இவ்வூரைச் சுற்றியுள்ள கிராமங்களெல்லாம் இளங்கன்றுக்குடி, (இளங் கார்குடி என்பார்கள்) வெண்ணெய், கோமலர், கண்ணபுரம் என்றே பெயர் பெற்றிருக்கிறது. கிருஷ்ணனோடு மிகத் தொடர்புடைய ஊர் இது. பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் இது ஒன்று என்பர் பெரியோர்.

உற்சவர் மிக அழகானவர். ஏதோ வருஷத்துக்கு இரண்டு மூன்று முறையே அபிஷேகம் பெறுகிறார். ஒரு அபிஷேகத்துக்குக் காவிரிக்கே எழுந்தருளுவார். அன்று