பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

239

தான் அர்ச்சகர்கள், ஆமருவியப்பனின் முழு மேனியழகையும் நமக்குக் காண்பிப்பார்கள். பங்குனிப் புனர்வசு ராமன் பிறந்தநாள். அன்று இந்தக் கண்ணனையே ராமனாக அலங்காரம் பண்ணிச்சிவன் கோயில் வரை உலா வரப் பண்ணுவர், இராமாவதாரம் பாடிய கம்பனுக்கு ஆமருவியப்பன், ராமனாகவே காட்சி கொடுத்திருக்கிறான் என்றும் கூறுவர். உற்சவராம் ஆமருவியப்பனைவிட, மூலவராம் 'திருவுக்கும் திருவாகிய செல்வன்' மிக்க அழகு வாய்ந்தவன். உயரம் பத்து அடிக்குக் குறையவில்லை . நல்ல ஆஜானுபாகு. நின்ற திருக்கோலத்தில் கரிய திருமேனியனாக அமைந்த நல்லசிலாவடிவம். தலையிலே தங்கக் கிரீடம். இடையிலே தசாவதார பெல்ட். கழுத்திலே சஹஸ்ரநாம மாலை. தோள்களிலே வாகுவலயம். மார்பிலே லக்ஷ்மி. எல்லாம் தங்கமயம், நெற்றியிலேவைரத்திருநாமம். எல்லாவற்றையும் விட மந்தஹாசத்துடன் சாந்தம் தவழும் திருமுக மண்டலம். இந்தத் திருமுக தரிசனம் பெற்ற திருமங்கை மன்னன்,

திருவுக்கும் திருவாகிய செல்வார்
தெய்வத்துக் கரசே! செய்ய கண்ணா !
உருவச் செஞ்சுடர் ஆழிவல்லானே!
உலகு உண்ட ஒருவா! திருமார்பார்

என்று பாடிப் பரவியதுடன்,

செந்தமிழும் வடகலையும் திகழ்ந்தநாவர்
திசைமுகனே அனையவர்கள் செம்மைமிக்க
அந்தணர்தம் ஆகுதியின் புகையார் செல்வத்து
அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே!

என்றும் புகழ்ந்து ஏத்துகிறார். இந்தக் கருவறையிலேயே கருடாழ்வார், காவேரி, மார்க்கண்டர், பிரஹலாதர் எல்லோரும் இருக்கிறார்கள். அகஸ்தியரும் காவேரியும் பிணக்குற்றனர் என்றும் அதனால் ஒருவருக்கொருவர்