பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

243

அந்தர்த்தியானம் ஆகிவிடுகின்றனர். அப்படி பூலோகத்துக்கு வந்து திரும்பவும் பார்வதியை மணம் முடித்துச்சென்றவரே 'சொன்னவாறு அறிவார்' என்ற பெயருடன் நிலைக்கிறார். நல்ல காதல் கதை. இறைவரது வாழ்விலும் அல்லவா இக்காதல் புகுந்திருக்கிறது. இந்தச் சொன்னவாறு அறிவார் கோயில் கெண்டிருக்கும் தலம் திருத்துருத்தி, அத்திருத் துருத்திக்கே செல்கிறோம் நாம் இன்று.

துருத்தி என்றாலும் திருத்துருத்தி என்றாலும் பூகோளப் படத்திலே ஊரைக்கண்டுபிடித்தல் இயலாது. தஞ்சை ஜில்லாவிலே உள்ள குத்தாலம் என்ற ஊரின் பெயரே அக்காலத்தில் துருத்தி என்று இருந்திருக்கிறது. துருத்தி என்றால் ஆற்றில் இடைக்குறை, அதாவது தீவு என்று அர்த்தம். காவிரி நதியிலே ஒரு சிறு தீவாக இத்தலம் இருந்திருக்க வேண்டும். பின்னரே காவிரி கோயிலுக்கு வடபக்கம் மாத்திரம் சென்றிருக்கவேண்டும். அந்தத் துருத்தி எப்படிக் குத்தாலம் ஆயிற்று? சொன்னவாறு அறிவார் வந்து நின்ற இடம், உத்தாலம் என்னும் ஒருவகை ஆத்தி மரத்தடியிலே. அந்த உத்தாலமே பின்னர் குத்தாலம் ஆகி, அதன்பின்னர் தென்பாண்டி நாட்டிலே தென்காசியை அடுத்து வட அருவியைக் கொண்ட திருக்குற்றாலத்துக்கு ஒரு போட்டிக் குற்றாலமாக விளங்குகின்றது இன்று. இந்தக் குத்தாலம், மாயூரம் தஞ்சை ரயில் பாதையில் மாயூரத்துக்குத் தென் மேற்கே ஆறு மைல் தொலைவில் இருக்கிறது. நல்ல ரயில், ரோடு வசதியெல்லாம் உடைய பெரிய ஊர்தான். எளிதாகவே சென்று சேரலாம். இந்தக் குத்தாலத்திலே மூன்று கோயில்கள். எல்லாமே சோழ மன்னர்கள் கட்டிய கற்றளிகள். சொன்னவாறு அறிவார் கோயில், கண்ட ராதித்த சோழதேவரது மனவிை சிவபக்த சிரோன்மணி, செம்பியன் மாதேவி எடுப்பித்தது. சோளேச்சுரர் கோயில் என்று அழைக்கப்படும் விக்கிரம சோழீச்சுரம் விக்கிரம சோழனால் எடுப்பிக்கப்பெற்றது. ஓங்காரேச்சுரம் என்னும்