பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

260

வேங்கடம் முதல் குமரி வரை

ஒப்படைத்திருக்கிறான். அமைச்சரோ நிறைந்த சிவபக்தி உடையவர், பணத்தை வாரிவாரித் திருப்பணி வேலையை நடத்துகிறார். அவருக்கோ கணக்கு என்று ஒன்று எழுதி வைத்துக்கொள்ள நேரமில்லை. அரசரிடம் யாரோ கோள் மூட்டியிருக்கிறார்கள், அரசரும் அமைச்சரிடம் தாம் கணக்குகளைப் பார்வையிட விரும்புவதாகச் சொல்கிறார். அமைச்சர் என்ன பண்ணுவர்? ஆனால் அமைச்சரையும் முந்திக்கொண்டு விநாயகர் கணக்குப் பிள்ளைவடிவத்தில் அரசர் முன் ஆஜராகிறார். கணக்கை வாசிக்கிறார். 'எத்து நூல் எண்ணாயிரம் பொன்' என்று கணக்கைப் படிக்க ஆரம்பித்ததுமே 'போதும் போதும்' என்று நிறுத்தி விடுகிறார் அரசர். கற்களை வெட்டிச் செதுக்குமுன் கயிற்றை சுண்ணாம்பில் தோய்த்துக் குறிசெய்து கொள்வான் சிற்பி. அந்தக் கயிற்றுக்கே எத்து நூல் என்று பெயர். எத்து நூலே எண்ணாயிரம் பொன் என்றால் மற்றச் செலவுகளை எப்படிக் கணக்கிடுவது. இப்படி ஒருகணக்குப் பிள்ளையாக வந்த விநாயகரே கணக்கவிநாயகராக அந்தக் கோயிலில் தங்கிவிடுகிறார்.

இந்தக் கங்கை கொண்ட சோழீச்சுரத்தின் பெருமையையும், விசாலமான பரப்பையும் வெளிப்படுத்தும் சின்னங்கள் பல அங்கே இருக்கின்றன. இங்கே பழைய அரண்மனைகள் இருந்த இடம் இன்று மாளிகை மேடாய் விளங்குகிறது. அங்கே மேடு இருக்கிறது, மாளிகை இல்லை. இன்னும் தொட்டி குளம், பள்ளிவாடை, செங்கல்வேடு, குயவன்பேட்டை, யுத்தபள்ளம் என்றெல்லாம் பல பகுதிகள் அங்கு அன்று வாழ்ந்த மக்கள் தொகுதிகளைப் பற்றிக் கதை கதையாகக் கூறுகின்றன. எல்லாவற்றையும் தூக்கி அடிக்கும் சோழகங்கம் என்ற பெரிய ஏரி ஒன்றும் இருந்திருக்கிறது. அந்த ஏரியின் கரை 16மைல், அதற்கு வந்த கால்வாயின் நீளம் 60மைல். எல்லாம் இடிந்து இன்று கரைகள் மட்டுமே காணப்படுகின்றன.