பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

263

பெயரோடு, அந்தச் செஞ்சடையப்பரை அசுரகுல மகளான தாடகை என்பவள் (ராமாயணத்தில் வரும் தாடகையல்ல) தினசரி பூமாலை புனைந்து ஏத்தி வணங்கி வருகிறாள். ஒரு நாள் மாலையுடன் இறைவன் திருமுன்பு வரும்போது அவள் தன் மேலாக்கு நழுவுகிறது. அவளுக்கோ இக்கட்டான நிலை. மேலாக்கைச் சரிசெய்ய மாலையைக் கீழே தரையில் வைக்கவேண்டும். மாலையைத் தரையில் வைக்காவிட்டால், மேலாக்கு நழுவிப் பலர் முன்னிலையில் மானம் இழக்க நேரிடும். இந்த நிலையில் இறைவன் அவள்தன் மானங்காக்க விரைகின்றான். அவள் எளிதாகத் தனக்கு மாலை அணிவிக்கும் வகையில் தலைதாழ்த்திக் கொடுக்கிறான். பக்தர்களது அன்புக்குக் கட்டுப்பட்டவன் அல்லவா! தலையை மாத்திரம்தானா தாழ்த்துவான்? உடலையே வளைத்துப் பக்தர்களது உள்ளத்துக்கு உவகையளிப்பவன் ஆயிற்றே.

இப்படித் தாடகையின் பக்தியை உலகறியச் செய்த அப்பெருமகன் செஞ்சடையப்பன் அன்று முதல்தான் கோயில் கொண்டிருக்கும் தலத்திற்கே அத்தாடகையின் பெயரைக் கொடுத்து, தாடகைசச்சரம் என்றே அழைக்கிறான். அந்தப் பெயரே நிலைக்கிறது அக்கோயிலுக்கு, (திருநெல்வேலி சப்-கலெக்டர்களுக்கும் இச்செஞ்சடைவேதியனுக்கும் ஒரே ஒரு வித்தியாசம். அங்கே சப்-கலெக்டர்கள் தங்கள் தங்கள் பெயரையே விளம்பரப்படுத்திக் கொண்டார்கள். இங்கோ இறைவன் தன்பெயரைத் தியாகம் பண்ணிவிட்டு, தன் பக்தையின் பெயருக்குப் பிரதான்யம் கொடுத்து விடுகிறான். அவ்வளவுதான்) இந்தத் தாடகைாச்சரம் என்னும் கோயில் இருக்கும் தலந்தான் திருப்பனந்தாள். அந்தப் பனந்தாள் என்னும் தலத்துக்கே செல்கிறோம் நாம் இன்று.

இத் 'தண் பொழில் சூழ் பனந்தாள் தாடகை ஈச்சரம்' கும்பகோணத்துக்கு வடகிழக்கே பன்னிரண்டு மைல்