பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

264

வேங்கடம் முதல் குமரி வரை

தொலைவில் இருக்கிறது. கும்பகோணத்திலிருந்து காரிலோ, பஸ்ஸிலோ ஏறிச்செல்லலாம். ரயிலில் செல்பவர்கள் ஆடுதுறையில் இறங்கிவிட வேண்டும். அங்கிருந்து ஆறு மைல் வண்டியிலே செல்லவேண்டும். பஸ்ஸுக்கெல்லாம் காத்து நின்றால் இடம் கிடைப்பது அரிது. மேலும் சாவதானமாக வண்டியில் சென்றால் ஆடுதுறை ஆபத்சகாயர் கோயிலுக்குச் செல்லலாம். பவளவல்லியாம் அம்மையை வணங்கலாம். அன்று சுக்கிரீவன் பூஜித்த தலம் ஆனதால் தென் குரங்காடு துறை எனப்பெயர்பெற்ற பதி இன்று ஆடுதுறை என்று குறுகி இருக்கிறது. 'நீலமாமணி நிறத்து அரக்கனை இருபது கரத்தொடும் ஒல்க, வாலினால் கட்டிய வாலியார் வழிபட்ட கோயில்' காவிரியின் வடகரையில் திருவையாற்றை அடுத்து வட குரங்காடுதுறை என்ற பெயரில் இருக்கிறது என்பதையும் இங்கேயே தெரிந்து கொள்ளலாம்.

இன்னும் வழியில் திருமங்கலக்குடி என்னும் பாடல்பெற்ற தலத்திற்கும், சூரியனார் கோயில் என்னும் பெயரில் சூரியனையே மூலமூர்த்தியாகக் கொண்ட கோயிலுக்குமே செல்லலாம். இதற்காகத்தான் வண்டிப் பயணம் நல்லது என்றேன். இல்லை, இது வேகயுகம், விரைவிலேயே செல்ல வேண்டும் என்றால்நேரே திருப்பனந்தாளுக்கே செல்லுங்கள். இங்கு தலவிருட்சம் பனை. பனையைத் தல விருட்சமாகக் கொண்டு இன்னும் வட ஆற்காடு மாவட்டத்தில் காஞ்சிக்கு மேற்கே எட்டு மைல் தூரத்தில் உள்ள வன்பார்த்தான் பனங்காட்டூர் மற்றொன்று திருவாரூக்கு வடகிழக்கே எட்டு மைல் தொலைவில் ஆண்டிப்பந்தல் பக்கம் உள்ள பனை ஊர். பனையூர் போவது எளிதே அல்ல, பனக்காட்டூரில் பனையைக் கோயிலுள் கண்டதாக ஞாபகமில்லை. திருப்பனந்தாள் சடையப்பர் கோயிலிலோ கீழைப் பிரகாரவாயில் பக்கம் இரண்டு பனைகள் ஓங்கி வளர்ந்து நிற்கின்றன.