பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/268

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
266
வேங்கடம் முதல் குமரி வரை
 

லிங்கமும் பிரதிஷ்டை செய்யப் பெற்றிருக்கின்றன. தாடகையின் மாலையை ஏற்று அருளிய அவசரத்தில், அவள் விரும்பிய வண்ணமே அவளது கைகள் பதினாறாகப் பெருக இறைவன் அருள் செய்திருக்கிறான். ஆம் இரண்டே திருக்கரங்கள் இருந்ததனால் தானே ஆடை நெகிழ்வதைச்சரி செய்ய முடியவில்லை ? கரங்கள் பதினாறு என்றால், எத்தனை மாலைகளை எப்படி எப்படி எல்லாம் சாற்றலாம்! அப்படிக் கைகள் வளர்ந்து பூஜை செய்யும் தாடகையின் சிலை ஒன்று மகாமண்டபத்தில் தென்மேற்கு மூலையில், சுவரில் உப்புச உருவில் இருக்கிறது.

இனி கோயிலுள் நுழைந்து செஞ்சடைஅப்பரை வணங்கலாம். அப்படி அங்கு போனதும் ஒரு கேள்வி எழும். 'தாடகைக்காகத் தலை தாழ்த்திய தலைவன், இப்போது தலைநிமிர்ந்து நிற்கிறாரே, இவர் எப்போது தாழ்த்திய தலையை நிமிர்த்தினார்?' என்று கேட்கத் தோன்றும். அதை அறிய சேக்கிழாரது பெரிய புராணத்தைப் புரட்டவேண்டும். குங்கிலியக்கலயர் வரலாற்றைப் படிக்கவேண்டும். வரலாறு இதுதான்: கலயர் திருக்கடவூரிலே அந்தணர் குலத்திலே பிறந்தவர். இறைவனது சந்நிதியில் இடையறாது குங்கிலிய தூபம் இடும் பணிசெய்து வந்ததால் குங்கிலியக் கலயர் எனப் பெயர் பெறுகிறார். வீட்டிலோ வறுமை. உணவுக்கு வழியில்லை. மனைவி தன் திருமாங்கல்யத்தைக் கொடுத்து உணவுப் பொருள் வாங்கிவரச்சொன்னால் அதைக் கொண்டு குங்கிலியப் பொதி ஒன்றை வாங்கித் தம் திருப்பணியை நடத்துகிறார். இந்தப் பக்தருக்குச் செல்வம் பெருக இறைவனும் அருள் புரிகிறார். இவர் பனந்தாளில் இறைவன் தாடகைக்காகத் தலை தாழ்த்தியதையும், பின்னர் அரசன் முதலாயினோர் எவ்வளவோ முயன்றும் தலை நிமிர வில்லை என்பதையும் அறிகிறார். இறைவன் என்ன இலேசுப்பட்டவனா? அவ்வளவு எளிதில் தாழ்த்திய தலையை நிமிர்த்திவிடுவானா? அவன் குங்கிலியக் கலயர்