பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

25

விழுந்து முறிகிறது. அப்படி முறிந்த தடியிலிருந்து எண்ணற்ற பொற்காசுகள் வெளியே சிதறுகின்றன. அப்போது விளங்குகிறது அண்ணன் செய்த சாகசம். முன்னோரின் பொருளையெல்லாம் பொற் காசுகளாக்கி அதனைக் கைத்தடிக்குள்ளே மறைத்து வைத்து தான் சத்தியம் செய்வதற்கு முன்னமேயே தம்பியிடம் கைத்தடியைக் கொடுத்து, அப்படிச் சொன்னதன் மூலமாக வட்டப்பாறை தெய்வத்திடமிருந்து தப்பி விடலாம் என்று அண்ணன் எண்ணியிருக்கிறான். பாவம், அவன் அறியான் 'அரசன் அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும்' என்பதை. பொய்ச் சத்தியம் பண்ணி விட்டுத்தடியைத் திரும்ப வாங்கிக் கொண்டதும் வட்டப் பாறைத் தெய்வம் தனது கோபத்தைக் காட்டி விடுகிறது. மூத்தவன் உயிர் நீத்த இடம் தும்பூர். திருவாமாத்தூருக்கு வடக்கே நாலு மைல் தூரத்தில் இருக்கிறது. வட்டப் பாறை இருப்பது திருவாமாத்தூர் கோயிலுள் அம்மன் சந்நிதிக்குப் பக்கத்தில். இங்கு கோயில் கொண்டிருப்பவள் முத்தாம்பிகை. அவளே வட்டப் பாறைத் தெய்வமாக விளங்குகிறாள் என்பர். அதற்கேற்றாற்போல் தும்பூரில் தோன்றிய பாம்பின் தலை அங்கிருக்க, அதன் வால் முத்தாம்பிகையின் திருவடிக்கீழ் நீட்டிக் கொண்டிருக்கிறது கல் உருவில். வட்டம் என்றால் ஏதோ வட்ட வடிவமான பாறை என்றெல்லாம் நினைக்க வேண்டாம். ஏதோ சிவலிங்கத்துக்கு என்று அமைந்த ஒரு சிறு சந்நிதிதான் அது. இப்படி வட்டப் பாறையால் பிரசித்தி அடைந்த தலம்தான் திருவாமாத்தூர்.

இந்த ஆமாத்தூர் விழுப்புரத்துக்கு மேற்கே நாலு மைல் தூரத்தில் இருக்கிறது. விழுப்புரம்-செஞ்சி ரோட்டில் விழுப்புர நகர எல்லை கடந்ததும் மேற்கு நோக்கி ஒரு மண் ரோடு செல்லுகிறது. அந்தப் பாதையிலே நடந்துதான் செல்ல வேண்டும். அப்படிச் சென்றால் திருவாமாத்தூர்