பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/271

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்
269
 

புடைபட ஆடவல்லான், மிகு
பூதம் ஆர்பல் படையான்,
தொடைநவில் கொன்றையொடு
வன்னி துன் எருக்கும் அணிந்த
சடையவன் ஊர், பனந்தாள்
திருத் தாடகை ஈச்சரமே.

என்பது சம்பந்தர்தேவாரம். அக்கோயிலைக் கட்டியவர் திருப்பனந்தாள் நக்கன் தரணி என்று ஒரு கல்வெட்டு கூறும். இக்கோயில் அம்மன் சந்நிதியைக் கட்டியவர்கள் வெண்கூறு உடையார், அன்பர்க்கரசு, மருதமாணிக்க வில்லவராயர் என்று இறைவன் கோயிலில் மகா மண்டபத்துத் தென்பால் உள்ள கல்வெட்டுத் தெரிவிக்கும். கோயிலைச் சோழ மன்னர்கள் எப்படிப் புரந்து வந்தார்கள் என்பதையெல்லாம் தெரிய ஒரு பெரிய கல்வெட்டு ஆராய்ச்சியே நடத்த வேணும். இன்னும் 1447ல் விஜயநகர வேந்தனாயிருந்த தேவராய மகாராயரின் மகனாகிய மல்லிகார்ச்சுன தேவன் இக்கோயிலின் வைகாசித் திருவிழாவுக்கு நிலம் அளித்த செய்தியை ஒரு கல்வெட்டு கூறுகிறது. இவைகளை விரிக்கில் பெருகும். இன்று இந்தக்கோயில் இருப்பது தருமபுரம் ஆதீனத்தின் கீழ். நிர்வாகம் சிறப்பாக நடக்கிறது என்று சொல்லவா வேண்டும்?

அன்று இந்தத் திருப்பனந்தாளில் ஒரு பட்டன் இருந்திருக்கிறான். வரையாது கொடுக்கும் வள்ளன்மை உடையவன் அவன். அவனது கொடைத்திறனைக் காளமேகப் புலவர் பாடியிருக்கிறார்.

விண்ணீ ரும் வற்றிப் புவி நீரும்
வற்றி, விரும்பி அழக்
கண்ணீரும் வற்றிப் புலவோர்
தவிக்கின்ற காலத்திலே
உண்ணீர் உண்ணீர்' என்று உபசாரம்
பேசி, உண்மையுடன்