பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/277

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்
275
 

முனிவருக்கு ஜோதிர்லிங்கமாகக் காட்சி கொடுத்ததால், இடைமருதூர் என்று பெயர் பெற்றது என்பர். வீரசோழன் இங்குள்ள காடுகளை வெட்டி நிலத்தைப் பண்படுத்தி ஆலயத் திருப்பணி செய்த காரணத்தால் இதனை வீரசோழபுரம் என்றும் கூறுவர். வீரசோழன் பெயரால் ஓடும் காவிரியின் கிளை நதியும் இந்த ஊரை அடுத்தே ஓடுகிறது. இந்தத் தலம் பல தலங்களுக்கு நடுநாயகம். வலஞ்சுழியில் விநாயகர், சுவாமிமலையில் முருகன், ஆய்ப்பாடியில் சண்டீசர், சிதம்பரத்தில் நடராஜர், சீகாழியில் பைரவர், திருவாவடுதுறையில் நந்தி, சூரியனார் கோயிலில் நவக் கிரஹங்கள் என்றெல்லாம் சுற்றாலயங்கள் கொண்ட மகாலிங்கர் பெருமுலை நாயகியுடன் இங்கு கோயில் கொண்டிருக்கிறார். இத்தலத்தை மத்தியார்ஜுனம் என்றும் இங்குள்ள அம்பிகையைப் பிருஹத் சுந்தர குசாம்பிகை என்றும் நீட்டி முழக்கி அழைப்பார்கள் வடநூலார்.

இந்தக் கோயிலுக்கு மூன்று பிராகாரங்கள். முதல் பிராகாரம் அசுவமேதப் பிரதக்ஷனைப் பிரகாரம். இங்கு வலம் வருபவர் அசுவமேத யாகம் செய்த பலனைப் பெறுவர். அடுத்தது கொடுமுடிப்பிராகாரம். இங்கு வலம் வருபவர் திருக்கயிலையை வலம் வந்த பயன் பெறுவர். அடுத்தது பிரணவப் பிரகாரம். இதுவே கருவறையை ஒட்டியது. இங்கு வலம் வருபவர் மோக்ஷ சாம்ராஜ்யத்தையே பெறுவர். நாம், எல்லாப் பிரதக்ஷணத்தையும் சுற்றி எல்லா நலன்களையுமே பெற்றுவிடுவோமே. படித்துறை விநாயகர் அருள் பெற்று நந்தியையும் கடந்து அதன்பின்தான் உள் கோயிலுக்குச் செல்லவேண்டும். அந்த வாயிலின் வடபக்கத்திலே தான் சோழப் பிரம்மஹத்தி ஒரு பொந்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறது: ஒரே சோக வடிவம். நாம் பொந்தையோ, அதிலுள்ள பிரமஹத்தி சிலை வடிவையோ பார்க்கவேண்டாம். நாம் பார்க்கவேண்டிய பொந்து கர்ப்பக் கிருஹத்தில் அல்லவா இருக்கிறது. அதை மணிவாசகர்,