பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/278

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
276
வேங்கடம் முதல் குமரி வரை
 

எந்தை எந்தாய் சுற்றம்
மற்றும் எல்லாம் என்னுடைய
பந்தம் அறுத்து, என்னை
ஆண்டு கொண்ட பாண்டிப்பிரான்
அந்த இடை மருதில்
ஆனந்தத் தேன் இருந்த
பொந்தைப் பரவி நாம்
பூவல்லி கொய்யாமோ?

என்று அழகாகப் பாடுகிறாரே, ஆதலால் மேலேயே நடக்கலாம். அடுத்தப் பிரகாரத்தின் வடபக்கத்தில் தலவிருட்சமான மருதமரத்தையும், அங்கு இறைவன் திருமஞ்சனத்துக்குத் தண்ணீர் எடுக்கும் கிருஷ்ண கூபத்தையும் பார்க்கலாம். அதன்பின் அர்த்தமண்டபம் கடந்து, பிரணவப் பிரகாரம் வலம் வந்து மகாலிங்கரைக் கண்டு தொழலாம். பட்டுப் பட்டாடைகள் சுற்றியிருப்பதோடு, நாகாபரணமும் அழகு செய்யும். சுடர் எறியும் விளக்குகள் ஒளி செய்யும். இவற்றுக்கிடையில் லிங்கத்திருவுருவமும் கொஞ்சம் தெரியும். அவரை வணங்கி எழுந்து, கீழவாயிலுக்கு வராமலேயே அப்படியே அம்பிகையின் சந்நிதிக்குச் சென்றுவிடலாம். கம்பீரமான கோலத்தில் நின்று கொண்டிருக்கும் பெருநலமாமுலை நாயகியைத் தொழுத பின்னர் அவளை வலம் வந்து வெளி வரலாம். அப்படி வந்தால் நாம் மூகாம்பிகை சந்நிதி வந்து சேருவோம். இங்கு இறைவி தவம் செய்யும் திருக் கோலத்தில் இருக்கிறாள், இம்மூகாம்பிகை வரசித்தி உடையவள். நீங்காத நோயும் இங்கு நீங்கும். இவளது சக்தி எல்லாம் பக்கத்தில் உள்ள மேரு வடிவில் உள்ள சக்கரத்தில் அமைந்து கிடக்கிறது. இத்தலத்தில் அகத்தியர் உமையை நோக்கித் தவம் செய்தார் என்றும், உமை தனித்து வந்து அகத்தியருக்குக் காட்சி கொடுத்தார் என்றும், பின்னர் உமையும் அகத்தியரும் செய்த தவத்துக்கு இரங்கி இறைவன்