பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

277

ஏகநாயகனாகக் காட்சி கொடுத்ததோடு இறைவியை வைகாசி உத்திரத்தில் திருமணம் செய்து கொண்டார் என்றும் புராண வரலாறு. இந்த மூகாம்பிகை கோயில் விமானம் தமிழ் நாட்டுக் கோயில் விமானங்கள் போல் இராது. ஏதோ ஊசிக் கோபுரம் போல் இருக்கும்.

இத்தலத்தில் தைப்பூசத் திருவிழா சிறப்பானது. இக்கோயிலின் மேலக் கோபுரத்தைக் கட்டியவனும் மற்றும் பல திருப்பணிகள் செய்தவனுமான வீர சோழனே ஜோதிர் மகாலிங்கப்பெருமானுக்குப் பூச நீராட்டுதலையும் ஏற்படுத்தினான் என்பர். பூசத் தன்று ஏகநாயகர் காவிரியில் உள்ள கல்யாண தீர்த்தத்துக்கு எழுந்தருளித் தீர்த்தம் கொடுத்தருளுவார். அன்று தேவர்கள் எல்லாம் வந்து விழாவில் கலந்து கொள்கிறார்கள் என்று ஒரு நம்பிக்கை. 'பூசம் புகுந்து ஆடப்பொலிந்து அழகான ஈசன் உறைகின்ற இடைமருது ஈதோ' என்றுதானே சம்பந்தர் அவரது பாடலில் இத்தலத்தினைச் சுட்டிக்காட்டுகிறார். ஆதலால் வசதி செய்து கொள்ளக் கூடியவர்கள், பூசநீராடி, காசி சென்று கங்கையில் நீராடிய பலனையெல்லாம் பெறுங்கள் என்பேன் நான்.

இத்தலத்தில் பட்டினத்தாரும் அவரது சீடர் பத்திரகிரியாரும் இருந்ததாக வரலாறு. கீழக்கோபுர வாயிலில் பட்டினத்தாரும் மேலக்கோபுர வாயிலில் பத்திரகிரியாரும் சிலை உருவில் இருக்கிறார்கள். இத்தலத்துக்குச் சம்பந்தர், அப்பர், சுந்தரர் எல்லோருமே வந்து பாடியிருக்கிறார்கள்.

கனியினும், கட்டிப்பட்ட கரும்பினும்,
பனிமலர்க் குழல்பாவை நல்லாரினும்,
தனிமுடி கவித்து ஆளும் அரசினும்,
இனியன் தன் அடைந்தார்க்கு இடை மருதன்.

என்ற அற்புத அனுபவத்தைப் பெற்றவர் அப்பர், இன்னும் இத்தலத்தைக் கருவூர்த்தேவர் திருவிசைப்