பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

279

வந்த சம்பந்தர், தம் தகப்பனார் யாகம் செய்ய இறைவனிடம் பொன் வேண்டியிருக்கிறார். சம்பந்தரின் இனிய பாடலைக் கேட்டுக்கொண்டே இருந்த இறைவன் பொன் கொடுப்பதை மறந்திருக்கிறார். உடனே சம்பந்தர் 'இதுவோ எமை ஆளுமாறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல். அதுவோ உனது இன்னருள்? ஆவடுதுறை அரனே!' என்று கோபித்துக் கொண்டே புறப்பட்டிருக்கிறார். உடனே இறைவன் விழித்துக்கொண்டு பொற்கிழி கொடுத்திருக்கிறார். இப்படி எல்லாம் நாம் கோபித்துக் கொண்டு திரும்பவேண்டாம். நாம் வணங்கும்போது அந்த ஆவடுதுறை அப்பன் நம்மை 'அஞ்சல்' என்று அருள் பாலிப்பான், அப்படியேதான் சொல்கிறார். எப்போதும் பணத்துக்கே அடிபோடும் சுந்தரர்கூட.