பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/284

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
282
வேங்கடம் முதல் குமரி வரை
 

வந்த சேரப் படைகளையும் முறியடித்து வெற்றி கண்டிருக்கிறான். பின்னர் ஈழம், கொங்கு, வடநாடு முதலிய இடங்களிலும் வெற்றி கண்டு, கடைசியில் விக்கிரம பாண்டியன் மகனான குலசேகர பாண்டியனையுமே வென்று மதுரையில் பட்டம் சூடிக்கொண்டிருக்கிறான். இப்படிச் சேரர், பாண்டியர், கொங்கர், தெலுங்கர் எல்லாரையும் வெற்றி கண்ட விறல் வீரன் திரிபுவன வீரதேவன் என்று பட்டம் சூடிக்கொண்டதில் வியப்பொன்றுமில்லை. ராஜராஜன், ராஜேந்திரன் போன்ற சோழப் பேரரசர்கள் வரிசையிலே வைத்து தானும் எண்ணப்படவேண்டும் என இத்திரிபுவனதேவன் நினைக்கிறான். உடனே ஒரு பெரிய கோயில் கட்ட முனைகிறான். அந்தக் கோயிலே இன்று திரிபுவனம் என்னும் தலத்தில் கம்பகரேசுரர் கோயிலாக அமைந்திருக்கிறது. இந்தத் திரிபுவனத்துக்கே செல்கிறோம் நாம்.

இத்திரிபுவனம் கும்பகோணத்துக்கும் திருவிடை மருதூருக்கும் இடையிலுள்ள சிற்றூர். ரயிலில் செல்பவர்கள் கும்பகோணத்தை அடுத்த திருநாகேசுவரம் ஸ்டேஷனில் இறங்கி வண்டி வைத்துக்கொண்டு செல்லலாம். ஆனால் பாதை நன்றாயிராது. திருவிடை மருதூர் அல்லது கும்பகோணம் ஸ்டேஷனில் இறங்கி வண்டியோ, காரோ வைத்துக்கொண்டு செல்வதுதான் நல்லது. இந்த ஊரை அடுத்த அம்மா சத்திரத்திலே பட்டுப் புடவை நெசவு அதிகம். பெண்களை அழைத்துக் கொண்டு செல்பவர்கள் கையில் நிறைய பணமும் எடுத்துக்கொண்டே செல்ல வேண்டும். இல்லாவிட்டால் ஊர் திரும்பும்போது தாம்பத்ய உறவிலே பிளவு ஏற்பட்டால் அதற்கு நான் பொறுப்பாளியில்லை. கோயில் கோபுரம் ஊருக்குள் நுழைவதற்கு முன்னமேயே தெரியும். நீண்டு உயர்ந்து கம்பீரமாக இல்லாவிட்டாலும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். கோயில் வாயிலுக்கு நேரே கிழக்கே இருந்தும்