பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

285

ஒரு பீடத்தில், அலங்காரம் பண்ணி நிறுத்தி வைத்திருப்பார்கள். கூடுமானால் மூர்த்தியை அவன் இருக்கும் வண்ணத்திலேயே காட்டச் சொல்லிக் கண்டு மகிழலாம். அதன்பின் மூலக் கோயிலுக்கு இடப்புறத்தில் அம்பிகையின் சந்நிதிக்கும் சென்று வணங்கலாம். அம்பிகையின் பெயர் அறம் வளர்த்த நாயகி. இறைவன் நமது நடுக்கங்களை யெல்லாம் தீர்த்தால் இறைவி அறம் வளர்த்து நம்மை யெல்லாம் புரக்கிறாள். அவளையும் வணங்கிவிட்டு வெளியே வரலாம்.

'இந்தக் கோயிலில் பார்க்கவேண்டியது எல்லாம் இவ்வளவுதானா?' என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. இனித்தான் நீங்கள் பார்க்க வேண்டிய அதிமுக்கியமான சரபர் சந்நிதி இருக்கிறது. சரபர் வரலாறு இதுதான். அதிக்கிரமங்கள் செய்து வந்த இரணியனை மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து அழிக்கிறார்; பிரகலாதன் முதலான பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இரணியன் உடல் கிழித்து உதிரம் குடித்ததும், நரசிம்மருக்கு ஒரு வெறியே ஏற்படுகிறது. பாதி மிருகம் தானே. ஆதலால் உலகத்தையே அழிக்க முற்படுகிறார்.

தலைவலி போய்த் திருகுவலி வந்த கதை ஆயிற்று அவரது காரியங்கள். தேவரும் மக்களும் அச்சமுற்றனர். சிவபிரானிடம் முறையிட்டனர். உடனே அவர் நரசிம்மத்தையும் வெல்லும் சரபராக உரு எடுக்கிறார். நரசிம்மத்தைத் தம் காலில் அடக்கி ஒடுக்குகிறார். சரபம் என்றால் அண்டப் பேரண்டப் பக்ஷி என்று கேட்டிருக்கிறோம். சிவபிரான் எடுத்த திருக்கோலம் சிங்க முகத்தோடே விரிந்த சிறகுகளோடே இத்தலத்தில் நடுக்கம் தீர்த்து அபயம் அளிப்பதாகும். இங்கு கம்பகரேசுரரோடு அச்சம் தீர்த்து அருள் புரிபவர் சரபருந்தான். நரசிம்மனை