பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

286

வேங்கடம் முதல் குமரி வரை

அடக்கும் சரபராக இறைவன் எழுந்தார் என்று கொள்வது வைஷ்ணவ பக்தர்களுக்குக் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். 'எல்லா மூர்த்திகளும் தோன்றி நின்று ஒடுங்கும் இறைவன் ஒருவனே; அவனே நரசிம்மன்; அவனே கம்பகரேசுரன்; அவனே சரபன்' என்று மட்டும் உணரத் தெரிந்து கொண்டால் அமைதி பெறலாம்.

சரபர் உருவத்தில் பயங்கரமாக இருப்பினும் வர பலத்தில் சிறந்தவர் அவர். ஆதலால் கொஞ்சம் அடக்க ஒடுக்கமாகவே அவரது சந்நிதிக்கும் சென்று வணங்கி அருள் பெற்று மீளலாம். தெற்கு நோக்கிய சந்நிதியில் சிலை உருவிலே மூலவராகவும், செப்புப் படிவத்திலே உற்சவராகவும் எழுந்தருளியிருக்கிறார். இந்தச் சந்நிதிக்குச் செல்பவர்களுக்குக் கலை அழகைக் காணும் பெருவாய்ப்பு ஒன்று காத்துக் கிடக்கும். சரபர் இருக்கும் மாடத்தின் வாயிலிலே இரண்டு பெண்கள் கொடியடியில் நிற்கும் மடக் கொடிகளாக நிற்பார்கள். கல்லிலே வடித்த கட்டழகிகள் அவர்கள். அவர்கள் நிற்கிற பாணியிலேதான் எத்தனைக் கவர்ச்சி ?

நடந்தாள் ஒரு கன்னி மாராச
கேசரி நாட்டில் கொங்கைக்
குடந்தான் அசைய ஒயிலாய்,
அது கண்டு கொற்றவரும்
தொடர்ந்தார், சந்நியாசிகள் யோகம்
விட்டார் சுத்த சைவ ரெலாம்
மடந்தான் அடைத்து சிவபூசையும்
கட்டி வைத்தனரே.

என்று ஒரு பாட்டு.