பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

ஒரு குறை. எங்கள் திருநெல்வேலி யிலே, எங்கள் தெருவை அடுத்த அனவரததானத் தெருவிலே பிறந்து, எனது பாட்ட னாருக்கும் அவர்தம் சிறிய தகப்ப னாருக்கும் குரு மூர்த்தியாக விளங்கிய வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் என்னும் முருகதாச சுவாமிகள் இந்தத் திருவாமாத்தூரில் ஒரு மடம் நிறுவினார்கள் என்றும், இங்கேயே ஞானசமாதி கொண்டார்கள் என்றும் சொல்வார்கள். அந்தச் சமாதியைப் பார்க்கவில்லையே என்று நான் ஏங்கினேன். உடனே உடன் வந்த நண்பர் பக்கத்தில் உள்ள நந்தவனத்துக்கு அழைத்துச் சென்றார்.

அங்குதான் தூய்மையான சூழ்நிலையில், தவத்திரு முருகதாச சுவாமிகளின் சமாதி இருக்கிறது. சமாதியையும் சமாதியின் மேல் அமைக்கப்பட்டிருக்கும் சின்னஞ்சிறிய பழனி ஆண்டவன் திருக்கோலத்தையும் கண்டு வணங்கி விட்டுத் திரும்பினேன். முருகதாச சுவாமிகள் இத்தலத்தையும் இங்குள்ள மூர்த்தியையும் பற்றி மூவாயிரத்து நானூற்று எண்பத்து மூன்று பாடல்கள் பாடியிருக்கிறார்கள் என்று சொன்னாலே போதும். அதை விவரித்துச் சொல்ல வேண்டியதில்லை யல்லவா?

திருவாமாத்தூர் அம்மானின் கோயிலைப் புதுப்பிக்கும் திருப்பணி வேலைகள் நடந்து முடிந்து, சென்ற சித்திரையில் கும்பாபிஷேகமும் நடந்திருக்கிறது. வசதியுள்ளவர்கள் எல்லாம் சென்று முத்தாம்பிகையையும் அபிராமேசுவரரையும் வணங்கலாம். ஒரேயொரு எச்சரிக்கை. பாகப் பிரிவினையில் தம்பியை ஏமாற்ற முனைந்த தமையனைப் போல் ஏதாவது ஏமாற்றுக் கச்சவடம் மட்டும் செய்து விடாதீர்கள். வட்டப் பாறை தெய்வம் பொல்லாதது.