பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்
33
 

இருக்காது என்ற கர்வம் உடையவர் அறிஞர். உண்மை என்ன என்றால் இவர்கள் இருவராலேயுமே இறைவனைக் காண்பது இயலாது என்பது தான். செருக்கும் கர்வமும் நிறைந்த உள்ளத்தால், இறைவன் முடியை என்ன. அடியையுமே காண முடியாது என்ற உண்மையைத்தான் விளக்குகிறது அண்ணாமலையார் கதை.

செல்வராலும் அறிஞராலும் அறியொணாத இறைவன் பின்னர் யாருக்கு எளியவனாகத் தன் உருவைக் காட்டுகிறான் என்றால், காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கும் பக்தர்களுக்குத்தான். பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய மணிவாசகர், அண்ணாமலையில் அந்தப் பொங்கழல் உருவமான அண்ணாமலையானை கண்டபோது 'ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெருஞ்சோதி' என்ற தன் திருவெம்பாவைப் பாடலை ஆரம்பிக்கிறார். பத்தொன்பது பாட்டுப்பாடி முடிந்ததும் ஆதியாகிய முடி எங்கேயிருக்கிறது, அந்த மாகிய அடி எங்கே இருக்கிறது என்று கண்டுவிடுகிறார். இறைவன் காண்பதற்கு எளியவனாக அமைந்து விடுகிறான்.

ஆதியாம் பாதமலர், அந்தமாம் செந்தளிர்கள் என்றுதானே, திருவெம்பாவை இருபதாம் பாட்டு கூறுகிறது. ஆம், இறைவனது அடியும் முடியும் அவனது திருத்தாள்களே என்ற உண்மையைப் பக்தனான கவிஞன் எவ்வளவு எளிதாகக் கண்டு விடுகிறான். மகாவிஷ்ணு வையும் பிரம்மாவையுமே மண்ணைக் கௌவ வைத்துவிடுகிறானே அவன், 'விண்ணிறைந்து மண் நிறைந்து மிக்காய் விளக்கொளியாய் எண்ணிறந்து எல்லை இலாதானாக' இருக்கும் இறைவனை எவ்வளவு எளிதாகச் சுட்டிக்காட்ட முடிகிறது கவிஞனுக்கு. இத்தனை அரிய உண்மைகளை விளக்கிக்கொண்டு நிற்கின்ற மலைதான் திரு அண்ணாமலை. அந்த மலையின் அடிவாரத்திலே கோயில் கொண்டிருக்கிறவர்தான் அண்ணாமலையார்.

வே.மு.கு.வ -2