பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

37

உடல் நோயால் நலிந்த அருணகிரியார் தன் உயிரை மாய்த்துக்கொள்ள இக்கோபுரத்தின் மீதேறி அங்கிருந்து குதித்தார் என்றும், அப்போது முருகப் பெருமானே அவரைத் தன் கையில் ஏந்தித் தரைதனில் விட்டார் என்றும், அன்று முதல், உடலில் மட்டும் அல்லாமல் உள்ளத்திலேயும் நலிவடையாதவராய் திருப்புகழ் பாடத்துவங்கினார் என்றும் அறிகிறோம். அருணகிரியாரைத் தாங்கியது போல நம்மையும் தாங்குவான் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தால் நாமும் கோபுரத்தில் ஏறிக் குதிக்க முனையலாம். இதன் பின் கிளிக் கோபுரத்தையும் பஞ்சமூர்த்தி மண்டபங்களையும் கடந்து சென்றால் அண்ணாமலையாரைக் கண்டு தொழலாம். நல்ல லிங்கத் திருவுருவில் அமைந்தவர் அண்ணாமலையார். பொன் போர்த்த நாகாபரணமும் நிறைய மலர்மாலைகளும் அணிந்தவராக காட்சி தருவார். இந்த அண்ணாமலையாரையே 'லிங்கோத்பவர்' என்று கலையுலகம் உருவாக்கியிருக்கிறது. ராஜராஜனும் அவனுக்குப் பின் வந்த சோழர்களும் கட்டிய கோயில்களில் எல்லாம் கோஷ்ட விக்கிரகமாக இவர் நின்று கொண்டி ருப்பதை நாம் அறிவோம்.

அண்ணாமலையான் ஆலய வெளித்தோற்றம்