பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

41

4

திருக்கோவலூர் திருவிக்கிரமன்

தென் பெண்ணை ஆற்றங்கரையிலே ஒரு சிறிய கிராமம். அங்குள்ள வீதி ஒன்றில் சிறிய வீடு ஒன்று. நேரமோ இரவு. அந்தச் சமயத்தில் வீதி வழி வந்த பெரியார் ஒருவர் அந்த வீட்டுக்காரரிடம் இரவு தங்க இடம் கேட்கிறார். வீட்டுக்காரரோ பரம பாகவதர். ஆதலால் வீடு தேடி வந்த பெரியவரிடம் வீட்டில் இருந்த இடைகழியை (ரேழி என்று சொல்லுகிறோமே, அதைத்தான்) காட்டி, 'இதில் ஒருவர் படுத்துக் கொள்ளலாம். படுத்துக் கொள்ளுங்கள்' என்கிறார். அவரும் இசைந்து அங்கே படுத்துக் கொள்கிறார். கொஞ்ச நேரம் கழிந்ததும் மழை பெய்கிறது. இரண்டாவது ஆளாக ஒருவர் வருகிறார். அவரும் தங்க இடம் கேட்கிறார். 'ஓ! இந்த ரேழியிலே இருவர் இருக்கலாம், வாருங்கள்' என்று அவரையும் உள்ளே அழைத்துக் கொள்கிறார் முதலில் வந்தவர். இன்னும் கொஞ்ச நேரம் சென்றதும், மூன்றாவது ஆளாக ஒருவர் வருகிறார். அவருமே தங்க இடம் கேட்கிறார். 'சரிதான் இந்த ரேழியிலே ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம், வாருங்கள், வாருங்கள்' என்று உபசரித்து அவரையும் சேர்த்துக் கொள் கிறார்கள். இப்படியே, ஒரு சிறிய இடைகழியிலே மூன்று பேர்கள் நின்று இரவைக் கழிக்கிறார்கள். நட்ட நடுநிசியில், இவர்களோடு இன்னொரு ஆளும் வந்து நின்று கொண்டு