பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்
47
 

மேலூர் உலகளந்தாரைக் காணச் சென்றவர்கள், திரு அரங்கநாதரையும் தரிசித்துத் திரும்பியது போல், கோவல் வீரட்டனாரைக் காணச் செல்பவர்கள் பெண்ணையின் வடகரையில் உள்ள அறையணி நல்லூர், அறையணி நாதரையும் அவரது மனைவி அருள் நாயகியையும் கண்டு வழிபட்டுத் திரும்பலாம். திருக்கோவலூரிலிருந்து அறையணி நல்லூர் செல்ல ஆற்றைக் கடக்கும்போது ஆற்றின் நடுவிலே, பாறையிலே ஒரு சிறிய கோயிலைப் பார்க்கலாம். அதனை இடைச்சிக் குன்று என்பார்கள். பெண்ணையின் நீர்ப் பெருக்கமோ பிரசித்தி உடையது. 'வெண்ணெய் உருகுமுன் பெண்ணை பெருகும்' என்பார்கள். எவ்வளவோ காலங்களுக்கு முன் இடைச்சி ஒருத்தி அறையணி நல்லூரிலிருந்து கோவலூருக்குச் செல்ல ஆற்றைக் கடந்திருக்கிறாள். அக்கரையில் இறங்கும்போது தண்ணீரே இல்லாதிருந்த ஆற்றில், இக்கரை சேருமுன் பெருவெள்ளம் வந்திருக்கிறது. ஆற்றின் நடுவிலே இருந்த பாறைமீது ஏறி நின்று தப்பித்திருக்கிறாள். அவளே அப் பாறையில் ஒரு கோயில் கட்டி படிகளும் அமைத் திருக்கிறாள். அதனையே இடைச்சிக் குன்று என்று கூறுகிறார்கள் மக்கள். அங்கே கபிலர்பிரதிஷ்டை செய்த லிங்கத் திருஉரு இருப்பதாகச் சொல்வார்கள். ஏறிப் பார்க்க வேண்டியதில்லை. ஆனால் ஆற்றைக் கடக்கும் போது இக்குன்றைப் பாராமலும் இருக்க முடியாது.

அறையணி நல்லூரை, மக்கள் அரகண்ட நல்லூர் என்கிறார்கள். இங்குதான் திருக்கோவலூர் ரயில்வே ஸ்டேஷன், போலீஸ் ஸ்டேஷன் எல்லாம் இருக்கின்றன. ரயில்வே ஸ்டேஷனிலிருந்து போலீஸ் ஸ்டேஷன் வந்து பின்னும் தெற்கே சென்றால், ஒரு சிறிய குன்றின் மேல் பெரிய கோபுரத்தோடு கூடிய கோயில் ஒன்றிருக்கும். கோபுரம் தனித்துத் தென் வாயிலில் இருக்கிறது. அதற்கு ஒரு தொடர்பும் இல்லாமல் மேற்கே பார்த்த சந்நிதியில்