பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

வேங்கடம் முதல் குமரி வரை

விவாதம் எப்படியும் இருக்கட்டும். கம்பனால் புகழ் பெற்றிருக்கிறார் சடையப்பர். அந்தச் சடையப்பரால் புகழ் பெற்றிருக்கிறது வெண்ணெய் நல்லூர். அந்த வெண்ணெய் நல்லூருக்கே செல்கிறோம் நாம் இன்று.

திருவெண்ணெய் நல்லூர் விழுப்புரத்துக்குத் தெற்கே பன்னிரண்டு மைல் தொலைவில் இருக்கிறது. விழுப்புரம் - திருச்சி ரயில் மார்க்கத்தில் சென்றால் திருவெண்ணெய் நல்லூர் ரோட் ஸ்டேஷனில் இறங்கலாம். அப்படி இறங்கினாலும் அங்கிருந்து நான்கு மைல் மேற்கே போகவேணும். இல்லை, திருக்கோவலூர் உலகளந்தார், வீரட்டர் முதலியவர்களைத் தரிசித்து விட்டு வருபவர்கள் திருக்கோவலூருக்கு நேர் கிழக்கே பதினான்கு மைல் ரோட்டில் வரவேணும். அப்படிச் சென்றால் இத்தலத்தை அடையலாம். எங்கு எல்லாமோ சுற்றிக் கொண்டு செல்லும் பாதை, முதலில் ஒரு தெப்பக் குளக்கரையில் கொண்டு சேர்க்கும். அக்குளத்துக்கு இரண்டு பக்கமும் இரண்டு கோயில்கள். குளத்துக்குத் தென்புறம் இருப்பது விஷ்ணு கோயில், வடபுறம் இருப்பது சிவன் கோயில். இருவரும் இப்படி ஒற்றுமையாக அடுத்தடுத்து இருந்தாலும் மக்கள் என்னவோ பிராதான்யம் கொடுப்பது சிவன் கோயிலுக்குத் தான்; அங்குள்ள கிருபாபுரி ஈசுவரருக்குத் தான். இந்தக் கிருபாபுரி ஈசுவரரின் பெயர் இன்று மங்கி மறைந்து போய்விட்டது. இன்று அவர் தடுத்து ஆட்கொண்ட நாதர் என்ற பெயரிலேயே பிரபலமாக இருக்கிறார். இத்தலத்துக்கு வெண்ணெய் நல்லூர் என்று ஏன் பெயர் வந்தது, இவர் ஏன் தடுத்தாட் கொண்ட நாதர் என்று பெயர் பெற்றார் என்று தெரிந்து கொண்ட பின்னர் கோயிலுக்குள் போகலாம். உமாதேவிக்குப் பசுக்களாகிய உயிர்களின் பேரில் அடிக்கடி இரக்கம் பிறந்து விடும். அதனால் கைலையை விட்டுத்தவம் செய்யப் பூலோகத்துக்கே வந்து விடுவாள். அப்படி வந்தவள் பசு வெண்ணெய்யினால் கோட்டை கட்டிக்