பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

55

ஆம் நம்பி ஆரூரர் காலத்தில் பெண்ணை இவ்வூரை அடுத்து ஓடியிருக்கிறது. பின்னர்தான் திசை திரும்பி வடக்கே ஒதுங்கியிருக்கிறது என்றார்கள். மேலும் பெண்ணையாற்றின் கிளையான ஒரு மலட்டாறு, ஊரை அடுத்து ஓடுகிறது என்கிறார்கள். நீரே இல்லாததால் மலட்டாறு என்று பெயர் பெற்றதோ, இல்லை, மலாடர் நாட்டில் ஓடுவதால் மலட்டாறு என்று பெயர் பெற்றதோ தெரிய வில்லை. ஆனால் இந்த மலட்டாற்றின் கரையிலேயே வெண்ணெய் நல்லூர் இருக்கிறது. அருள்துறை கோயிலும் இருக்கிறது.

இனி கோயிலுள் நுழையலாம். கோயிலுள் நுழைந்ததும் தலவிநாயகரான பொள்ளாப் பிள்ளையாரை வணங்கி விட வேண்டும். (பொள்ளா என்றால் உளியால் பொளியாத சுயம்பு என்று பொருள்) அப்படி வணங்கா விட்டால் அவர் பொல்லாதவராகவே மாறலாம். அப்பனைப் போல் பிள்ளையும், 'அற்புதப்பழ ஆவணங் காட்டி நம்மை ஆட்கொள்ளவே' முனையலாம் அல்லவா? இனி தடுத்து ஆட்கொண்ட தேவரையும் அவரது துணைவி வேற்கண்நங்கையையும் கண்டு தொழலாம். இவர்களைப் பற்றிச் சிறப்பாகச் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இந்தக் கோயிலுக்கு உள்ளேயே சிவஞான போதம் அருளிய மெய்கண்டாருக்கு ஒரு தனிச் சந்நிதி இருக்கிறது. அவர் வெண்காடர் அருளினாலே பெண்ணாகடத்திலே அச்சுதக் களப்பாளர் மகனாகப் பிறந்தவர். வெண்ணெய் நல்லூரிலே மாமனார் வீட்டிலே வளர்ந்தவர். பரஞ்சோதி முனிவர் அருளினாலே ஞானோபதேசம் பெற்று மெய்கண்டார் என்ற தீக்ஷாநாமம் பெற்றவர். சிவஞான போதம் என்னும் சாத்திரத்தை எழுதி, சித்தாந்த சைவத்தை நிலை நிறுத்தியவர். இவருக்குக் கோயிலுள் முக்கியத்துவம் அளித்தது போல், கோயிலுக்கு வெளியேயும் திருவாவடுதுறை மடத்தார் மடம் நிறுவி அதனைப் பரிபாலித்து வருகிறார்கள்.