பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்
57
 

கொண்டது, ஏதோ கர்ண பரம்பரைக் கதை என்றல்லாமல் உண்மையாய் நடந்த வரலாறு என்பதை வலியுறுத்தும்.

இத்தனையும் தெரிந்து கொண்ட இந்த மூச்சிலேயே சுந்தரர் பிறந்த நாவலூருக்குச் சென்று, அங்குள்ள பக்தஜனேசுவரையும் மனோன்மணியையும் வணங்கி விட்டே திரும்பலாமே. சென்னை திருச்சி டிரங்க் ரோட்டில் விழுப்புரத்துக்குத் தெற்கே பதினாறு மைல் சென்றதும், ரோட்டடியிலேயே திரு நாமநல்லூர் சமுதாய வளர்ச்சித் திட்ட ஆபீஸ் கட்டிடங்கள் தென்படும். அன்றைய திருநாவலூரே இன்று திருநாமநல்லூர் என்று விரிந்திருக்கிறது. அந்த மெயின் ரோட்டிலிருந்து இடப்பக்கம் திரும்பி ஒரு மைல் சென்று வடபக்கம் திரும்பினால் நாவலேசுவரர்கோயில் வாயில் வந்து சேரலாம், இறைவன், இறைவி சுந்தர நாயகியை எல்லாம் கண்டு தொழலாம்.

இந்தக் கோயிலுக்குள் ஒரு கோயிலிலே வரதராஜப் பெருமாள் வேறே இடம் பிடித்துக் கொண்டிருக்கிறார். வெண்ணெய் நல்லூரில் சுந்தரரை ஆட்கொண்டு அவர் முடிக்க இருந்த திருமணத்தைத் தடுத்து நிறுத்திய இறைவனே, பின்னர் ஒன்றுக்கு இரண்டாக, திருவாரூர் பரவையையும் திரு ஒற்றியூர் சங்கிலியையும் இவருக்கு மணம் முடித்து வைத்திருக்கிறார். இந்த இரண்டு மனைவியரோடு ஒருங்கிருந்து இவர் குடித்தனம் பண்ணினார் என்று அவர் சரித்திரம் கூறவில்லை . என்றாலும் பிறந்த இடத்துப் பெரியவர்கள், சுந்தரருடன் பரவை, சங்கிலி இருவரையுமே செப்புச் சிலையாக வடித்து, இரு பக்கங்களிலும் நிறுத்தி மகிழ்ந்திருக்கிறார்கள். நல்ல அழகான வடிவங்கள். சுந்தரரே இந்தத் தலத்தைத்தானே மிகவும் விரும்பியிருக்கிறார். 'வேயாடியார் வெண்ணெய் நல்லூரில் வைத்து என்னை நா யாடியார்க்கு இடமாவது திருநாவலூரே' என்பதுதானே அவரது தேவாரம். எவ்வளவுதான் பற்று அற்றவர்கள் ஆனாலும் பிறந்த இடத்துப் பாசம் போகுமா, என்ன?