பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

வேங்கடம் முதல் குமரி வரை

தந்திருக்கின்றனவே. இந்தப் பண்ணுருட்டி ஸ்டேஷனில் இறங்கி வண்டி பிடித்துக் கொண்டுதான் செல்ல வேண்டும். திரு அதிகை செல்ல வேண்டும் என்று சொன்னால் வண்டிக்காரர்களுக்குத் தெரியாது. திருவதி என்று சொன்னால் தான் தெரியும். (அவர்கள் என்ன? நெடுஞ்சாலைப் பொறியர்கள்கூட, ரோட்டிலே திருவதி என்று எழுதித்தானே போர்டு நட்டு வைத்திருக்கிறார்கள்!) ரயில்வே ஸ்டேஷனிலிருந்து கடலூர் செல்லும் ரோட்டில் ஒரு மைல் சென்றால், தென்புறம் ஒரு பெரிய கோபுரம் தென்படும். அங்கு வண்டியைத் திருப்பிக்கோயில் வாயிலில் வண்டியை விட்டு இறங்கலாம். அங்கு ராஜகோபுரத்தையும் முந்திக்கொண்டு ஒரு மண்டபம் நிற்கும். மண்டபத்துக்கு வடக்கே அப்பர் திருமடம், மண்டபத்தின் முகப்பிலே இறைவனுடைய திருமணக் கோலம். அக்கோலத்திலே, எல்லா இடங்களிலும் இறைவனுக்குப் இடப்பக்கம் இருக்கும் அம்பிகை, இங்கு வலப்பக்கமாக நிற்கிறாள். இந்த வேடம் வேண்டுமென்று கேட்டுத் தவம் செய்து பெற்றாள் என்று தலபுராணம் கூறும். இதற்கேற்பவே கோயில் உள்ளும் திரிபுரசுந்தரி இறைவனுக்கு வலப்புறமே கோயில் கொண்டிருக்கிறாள். சோழ-நடு நாட்டில் உள்ள கோயில்களில் இறைவி, இறைவனுக்கு வலப்புறம் இருப்பது இக்கோயில் ஒன்றுதான் என்று நினைக்கிறேன்.

இன்னும் இந்தத் திருஅதிகை, நாவுக்கரசராம் அப்பரை வாழ்வித்த இடமும்கூட. திருமுனைப்பாடி நாட்டிலே திருவாமூர் என்ற ஊரிலே மாதினியாரின் தவப்புதல்வியாக, திலகவதியார் பிறக்கிறார். இந்தத் திலகவதியாருக்கு ஒரு தம்பி மருள்நீக்கியார் என்ற பெயரோடு. அப்போது நாடெல்லாம் சமணம் பரவியிருக்கிறது. மன்னன் மகேந்திர வர்மனே ஜைன சமயத்தைச் சார்ந்திருக்கிறான். சைவ மரபிலே பிறந்த மருள் நீக்கியாரும் சமணம் ஆகிறார். சமண மடத்திலே தருமசேனர் என்ற பெயரோடு தங்கி வாழவும் செய்கிறார். இந்தச் சமயத்தில்