பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
76
வேங்கடம் முதல் குமரி வரை
 

என்று பரிவோடே கேட்டிருக்கிறார். குரு தமச்சிவாயர் பெண் என்ற பொருளிலேயே கிழத்தி என்று விளித்திருக்கிறார் அன்னையை. ஆனால் அன்னைக்கு, தன்னை இவன் வேண்டுமென்றே கிழவி என்ற பொருளில் அழைத்திருக்கிறான் என்று தோன்றியிருக்கிறது. உடனே பெரியநாயகி முதியவள் வடிவில் வந்து, 'ஏனப்பா, என்னைக் கிழத்தி கிழத்தி என்று பாடினாய். கிழவியால் எப்படிச் சோறு எடுத்து வர இயலும்?' என்று கேட்டிருக்கிறாள். ஒரு பாவமும் அறியாத குரு நமச்சிவாயர், 'இதுதானா கோபம்?' என்ற கேட்டுவிட்டுப் பாட்டை மாற்றி விடுகிறார்.

முத்த நதி சூழும்
முது குன்று உறைவாளே!
பத்தர் பணியும்
பதத்தாளே-அத்தன்
இடத்தாளே முற்றா .
இளமுலை மேல் ஆர
வடத்தாளே சோறுகொண்டுவா,

என்று பாடியிருக்கிறார். இதைக் கேட்டுப் பெரியநாயகி மகிழ்ச்சியுற்று இளமைநாயகி உருவில் வந்து குரு நமச்சிவாயருக்குச் சோறும் நீரும் கொடுத்து உதவி யிருக்கிறாள். அன்று முதல் இளமைநாயகிக்கு ஒரு சந்நிதி இந்தக் கோயில் உள்ளே என்பது தல வரலாறு. இது கூட எவ்வளவு உண்மையோ அறியேன். கன்னி, குமரி, அன்னை, கிழவி எல்லாம் ஒருத்தியேதான். 'அகிலாண்டகோடி ஈன்ற அன்னை என்றாலும், பின்னேயும் கன்னி என மறை பேசும் ஆனந்த ரூப மயிலாயிற்றே' அவள். இதையெல்லாம் உணர்ந்த அன்பர் ஒருவர் அம்பிகை பெயர் விருத்தாம்பிகை, பெரியநாயகி என்று மட்டும் இருப்பானேன், இளமை நாயகி, பாலாம்பிகை என்றும் இருக்கட்டுமே என்று நினைத்திருக்கிறார். இந்த நினைவின் ஞாபகமாகக்