பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

87

உயிரும், உணர்வும்போல், உள்ளும் புறத்தும்' நிறைந்து நிற்பவன் அல்லவா? திருவாரூரில் மண்ணாக, ஆனைக்காவில் நீராக, அண்ணாமலையில் அனலாக, காளத்தியில் காற்றாக வழிபடப் பெறும் இறைவனையே இங்கு ஆகாய உருவில் வழிபடுகிறோம் நாம். இறைவனை ஆகாய உருவில் வழிபடுதல்தான் எத்தகைய சிறந்த வழிபாடு.

எடுத்த எடுப்பிலேயே, நடராஜனைத் தரிசித்து அவர் மிகவும் பத்திரமாகக் காப்பாற்றி வைத்திருக்கும் ரகசியத்தையும் தெரிந்து கொள்கிறோம். இனி கோயில் வரலாற்றைத் தெரிந்து கொள்ளலாம். இந்தத் தலத்தின் பழைய பெயர் தில்லை. தில்லைச் செடிகள் நிறைந்த காடாயிருந்ததனால் தில்லை என்று பெயர் பெற்றிருக்கிறது. வியாக்ரபாதர் பூஜித்த தலம் ஆனதால் பெரும்பற்றப் புலியூர் என்று பின்னர் வழங்கியிருக்கிறது. என்றும் சிற்றம்பலத்தை உள்ளடக்கியிருப்பதால் சிதம்பரம் என்றும், பின்னர் இந்தச் சிற்றம்பலத்தையே பராந்தகன் பொன் வேய்ந்து சிறப்புச் செய்த காரணத்தால் பொன்னம்பலம் என்றும் விரிந்திருக்கிறது.

நடராஜன், உலக மக்கள் எல்லாம் உய்யத் தன் ஆனந்த தாண்டவத்தை ஆடிக்காட்ட எல்லா இடங்களையும் விட்டு விட்டு இந்தத் தலத்தை ஏன் தேடிப் பிடித்து எடுத்தான் என்பது ஒரு ரஸமான வரலாறு. வியாக்ர பாதர் (புலிக்கால் உடைய முனிவர் ஆனதனாலே இப்பெயர். அவருக்குத் தந்தை தாயார் இட்டபெயர் என்னவோ தெரியவில்லை..) காசியில் வாழ்ந்தவர். தில்லையின் பெருமையைத் தந்தை சொல்ல, காசியை விட்டுத் தில்லைக்கு வருகிறார். தில்லைக் காட்டின் நடுவிலே ஓர் ஆலமரத்தின் அடியிலே முளைத்து எழுந்த லிங்க உருவைக் காண்கிறார். அந்த உருவுக்கே வழிபாடு செய்கிறார். (இந்த லிங்கத் திருவுருவே இன்று இந்தத் திருக்கோயிலில் கர்ப்பக் கிருஹத்தில் கோயில் கொண்டிருக்கும் திரு மூலட்டானேசுவரர், இந்த உருவைக்