பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/94

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
92
வேங்கடம் முதல் குமரி வரை
 

இருக்கும் நிருத்த சபை வேறே. எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தப் பெரிய சிவன் கோயிலுக்குள்ளே கனகசபைக்குப் பக்கத்தில் தென் திசையில் தலை வைத்து வடதிசைக் காலை நீட்டித் தில்லை கோவிந்தராஜர் வேறே படுத்துக் கொண்டிருக்கிறார். 'கருது செம்பொனின் அம்பலத்தில்' ஒரு கடவுள் நின்று நடித்தால் காவிரித் திருநதியில் துயிலும் கருணை மாமுகிலான அரங்க நாதனும், இங்கேயே வந்து காலை நீட்டிப் படுத்துக் கொள்கிறார். தில்லைவாழ் அந்தணர் மூவாயிரவரும் நடராஜரைச் சேவிப்பது போலவே இவரையும் சேவிக்கிறார்கள்.

மூவாயிர நான்மறை யாளர்
முறையால் வணங்க
தேவாதி தேவன் திகழ்கின்ற
தில்லைத் திருச்சித்ர கூடம்

என்று இந்தக் கோவிந்தராஜர் கோயில் கொண்டிருக்கும் சித்ர கூடத்தை, திருமங்கையாழ்வார் மங்களா சாஸனம் செய்திருக்கிறார். பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற் பகுதியில் சோழ நாட்டை ஆண்ட இரண்டாம் குலோத்துங்கன் நடராஜரது சந்நிதியை விரிவாக்க விரும்பி, இந்தக் கோவிந்தராஜரை எடுத்துக் கடலில் எறிந்து விட்டான் என்றும், ராமானுஜர் இந்த விக்கிரகத்தைக் கைப்பற்றித் திருப்பதியில் பிரதிஷ்டை செய்தார் என்றும், பதினாறாம் நூற்றாண்டிலே கிருஷ்ணதேவராயனது சகோதரன் அச்சுதராயன் திரும்பவும் கோவிந்தராஜரைத் தில்லையிலே பிரதிஷ்டை செய்திருக்கிறான் என்றும் சரித்திரம் கூறும். சைவமும் வைணவமும் பின்னிப் பிணைந்து இணைந்து வாழும் பெருங்கோயிலாக இக் கோயில் இன்று நிலவுகிறது என்று சொன்னால் வியப்பில்லை.

அப்பர், சுந்தரர், சம்பந்தர் மூவரும் பாடிய திருப்பதி இது. இந்த மூவரால் பாடப் பெற்ற பெருமையோடு,