பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/95

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்
93
 

மணிவாசகரை முழுக்க முழுக்க ஆட்கொண்டு, அவர் பாடிய திருவாசகத்துக்குப் படி எடுக்கும் பெருமானாக அமைந்தவன் சிற்றம்பலவன். மணிவாசகரைக் கோவையார் பாடச் சொன்னவனும் அவனே. இது தவிர, திருநீலகண்டர், திருநாளைப் போவார், கூற்றுவர், கோச்செங்கட் சோழர், கணம்புல்லர், சேரமான் பெருமாள் முதலிய அடியவர்கள் முத்திபெற்ற ஸ்தலம். பொன்வண்ணத்தந்தாதி பாடிய சேரமான் பெருமானுக்கு ஆடிய பாதத்தின் சிலம்பொலி கேட்கச் செய்தவன் இந்தச் சபாநாயகன். இன்னும் இத்தலத்தில் தான் சேக்கிழார் எழுதிய திருத் தொண்டர் பெரிய புராணமும் அரங்கேறி இருக்கிறது. இத்துணை பிரசித்தி பெற்ற இக்கோயிலின் வரலாறு மிகப் பழமையானது. பல்லவ மன்னர்களும், சோழப் பேரரசர்களும், பாண்டியர்களும் போட்டி போட்டுக் கோயிலைக் கட்டியிருக்கிறார்கள். அம்பலத்துக்குப் பொன் வேய்ந்திருக்கிறார்கள், நிபந்தங்கள் ஏற்படுத்தி இருக்கிறார்கள். சிவபாத சேகரனான ராஜராஜன் தில்லைச் சிற்றம்பலவனிடத்திலே எல்லையில்லாத காதல் கொண்டவன். அவன் ராஜ்யத்தில் நிலம் அளக்கும் கோல் 'சிற்றம்பலக்கோலாக' இருந்தது. நெல் அளக்கும் மரக்காலோ 'ஆடவல்லானாகவே' இருந்தது. மேலும் திருமுறைகளை எல்லாம் இச்சிற்றம்பல முடையான் கோயிலிலிருந்து எடுத்துத் திருமுறை வகுத்திருக்கிறான் அந்தத் திருமுறை கண்ட சோழன் ராஜராஜன்.

இந்தத் தில்லையை அடுத்தே, இன்று அண்ணாமலை சர்வகலாசாலை உருவாகியிருக்கிறது. ஒரு பெரிய சர்வகலாசாலையை அமைக்க இதைவிட ஒரு சிறந்த இடத்தை, ராஜா அண்ணாமலைச் செட்டியார் அவர்கள் தேர்ந்தெடுத்திருக்க முடியாது. தில்லை நடராஜன் அல்லும் பகலும் ஆனந்தத் தாண்டவம் ஆடிக் கொண்டிருப்பதற்கு உரிய காரணங்களை நாம் அறிவோம். ஆனால் கவிமணி