பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/99

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்
97
 

வருஷங்களுக்கு முன்னால் உலகீன்ற அன்னையாம் பெரிய நாயகி ஞான சம்பந்தராம் பிள்ளைக்கு ஞானப்பால் ஊட்டிய வரலாற்றை. அந்த வரலாறு இதுதான்:

சீகாழியில் சிவபாத இருதயரது குமாரராக, பகவதி அம்மையார் வயிற்றில் ஞானசம்பந்தர் அவதரிக்கிறார். மூன்று வயதுப் பாலகனாக வளர்ந்திருந்தபோது, ஒருநாள் நீராடச் சென்ற தந்தையாருடன் தானும் உடன் வருவதாகப் பிடிவாதம் பிடிக்கிறது குழந்தை. எனவே குழந்தையை அழைத்துச் சென்று குளக்கரையில் நிறுத்திவிட்டு, குளத்தில் இறங்கி நீரில் மூழ்கி, அகமர்ஷ்ண மந்திரத்தை ஓதிக் கொண்டிருக்கிறார் தந்தை. முழுகிய தந்தை விரைவாக எழாததைக் கண்டு குழந்தை 'அம்மையே! அப்பா!' என்று கதறி அழுகிறது. இந்த அழுகுரலைக் கேட்ட அன்னையாம் பெரியநாயகியும் அத்தனாம் தோணியப்பரும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளியதோடு அம்மை இறங்கி வந்து தன் திருமுலைப் பாலைக் கறந்து அதில் சிவஞானத்தையும் கலந்து குழந்தைக்கு ஊட்டி விட்டு மறைகிறார்கள். நீரிலிருந்து எழுந்த தந்தை குழந்தையின் வாயில் பால் வடிவதைக் கண்டு, 'யார் கொடுத்த பாலைக் குடித்தாய்?' என்று அதட்டி, குழந்தையை அடிக்க ஒரு குச்சியை ஓங்குகிறார். அருள்ஞானம் பெற்ற குழந்தையோ உடனே வான வெளியைச் சுட்டிக் காட்டி,

தோடுஉடைய செவியன் விடைஏறி
ஓர் தூவெண்மதிசூடிக்
காடு உடைய சுடலைப் பொடிபூசி,
என் உள்ளம் கவர் கள்வன்
ஏடு உடைய மலரான் முனைநாள்
பணிந்து ஏத்த அருள்செய்த
பீடுஉடைய பிரமாபுரம்
மேவிய பெம்மான் இவன் அன்றே!

வே.மு.கு.வ-7