பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

வேங்கடம் முதல் குமரி வரை

கொஞ்சமும் தயங்காமல் சுந்தரர் சத்தியம் செய்கிறார். மணம் முடிகிறது. கொஞ்ச நாட்கள் கழித்ததும் திருவாரூர்த் தியாகர் ஞாபகமும் அத்துடன் பரவையின் ஞாபகமுமே சேர்ந்து வருகின்றது. சத்தியத்தையெல்லாம் காற்றில் பறக்க விட்டு விட்டுப் புறப்பட்டு விடுகிறார், திருவொற்றியூரை விட்டு.

சத்திய பங்கம் நேர்ந்ததன் காரணமாக இரு கண்களையுமே இழக்கிறார். என்றாலும் திருவாரூர் செல்வதை விடவில்லை, இந்த வன்தொண்டர். வெண்பாக்கம் சென்று இறைவனிடமே கேட்டு ஊன்றுகோல் ஒன்று பெறுகிறார். கச்சிக்கு வந்து ஏகம்பனை வணங்கி இடக்கண்ணில் ஒளி பெறுகிறார். இவ்வாறு ஒரு கண் ஒளி பெற்ற பின் உளம் கசிந்து பாடுகிறார்.

ஆலந்தான் உகந்து அமுது செய்தானை,
ஆதியை அமரர் தொழுதேத்தும்
சீலந்தான் பெரிதும் உடையானை
சிந்திப்பார்.அவர் சிந்தையுளானை
ஏலவார் குழல் உமைநங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே!


ஆகவே, நல்ல ஞானக் கண் பெற விரும்புபவர்கள், கண் பெற்ற பயனைப் பெற வேண்டியவர்கள் எல்லாம் சென்று காண வேண்டிய தலம் கச்சியும் அங்குக் கோயில் கொண்டிருக்கும் ஏகம்பனுமே.

மக்களுக்கு முக்தி தரும் நகரங்கள் ஏழு என்பர் பெரியவர்கள். காஞ்சி, அயோத்தி, மதுரை, மாயை, காசி, அவந்திகை, துவாரகை என்றும் கணக்கிடுவர். இவை ஏழில் காஞ்சியை ஒதுக்கி விட்டால், மூன்று சிவ ஸ்தலங்கள்.