பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

101

கைலாச நாதர் கோயில்

மற்றைய மூன்றும் விஷ்ணு ஸ்தலங்கள். காஞ்சி நகரம் ஒன்று தான் சைவ வைணவ சமரசம் கொண்டதாய் இருவருக்கும் பொதுவானதாக இருக்கிறது. அதனால்தான் முக்தி தரும நகரங்களுள் முதல் ஸ்தானம் வகிக்கிறது, காஞ்சி என்னும் கச்சி. கச்சிப்பேடு என்று பழைய கல்வெட்டுகளில் வழங்கப்படுவதே காஞ்சி. காஞ்சீபுரம் என்றும் இன்று வழங்கப்படுகிறது.

'கேட்டவரம் அளிக்கும் கீர்த்தியுள்ள தெய்வங்காள் கூட்டோடே எங்கே குடிபோனிர்?’ என்று கேட்கிறார் ஒரு கவிஞர். அவருக்குப் பதில் சொல்லலாம் நாம். அத்தனை தெய்வங்களும் சேர்ந்து ஒன்றாகக் குடி வந்திருக்கும் தலமே காஞ்சி. அங்குள்ள மக்களைக் கூட ஜன சங்கியைக் கணக்கு எடுத்து விடலாம். ஆனால் அங்குள்ள கோயில்களையும் மூர்த்திகளையும் கணக்கெடுப்பதென்பது என்னவோ சிரமசாத்தியமான காரியந்தான்.

நமக்குத் தெரியும், அண்ணன் தம்பிமார் சொத்துக்களைப் பாகப் பிரிவினை செய்து கொள்வார்களென்று. அத்தான் மைத்துனர்களுக்குள் ஏது பாகப் பிரிவினை? அந்தப் பாகப் பிரிவினையே நடந்திருக்கிறது இங்கே. காஞ்சி ஐந்து மைலுக்கு மேலே நீண்டிருக்கும் பெரிய ஊர். இதை இரண்டு கூறாக்கிச் சிவனும் விஷ்ணுவுமே பங்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.