பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

வேங்கடம் முதல் குமரி வரை

மேல் பகுதி சிவ காஞ்சி. கீழ்ப் பகுதி விஷ்ணு காஞ்சி. பங்கு வைத்தலில் கூட நேர்மை இல்லை. சிவன் பெரியதொரு பங்கைத் தனக்கு எடுத்துக் கொள்கிறான். அவன், அவன் துணைவி காமாக்ஷி, அவன் மகன் குமரன் இவர்கள் இருக்கும் பகுதியே பெரிய காஞ்சி.

அத்தி வரதரும் அவரைச் சேர்ந்தவர்களும் சிறிய காஞ்சியிலே இருக்கிறார்கள்.

சத்திய விரதர், மணிகண்டீசர், ஐராவதீசுவரர், கச்சபேசுவரர், தான்தோன்றி ஈசுவரர், புண்யகோட்டீசர், பாணாதரீசர் என்ற பெயர்களில் முப்பதுக்கு மேற்பட்ட கோயில்களில் இருக்கிறான் இறைவன்.

அதே போல் பச்சை வண்ணர், பவள வண்ணர், சொன்ன வண்ணம் செய்தவர், ஆதிகேசவர், அழகிய சிங்கர், உலகளந்தவர், ஜகதீசர், பாண்டவப் பெருமாள் என்ற பெயர்களில் விஷ்ணுவும் கிட்டத்தட்ட இருபதுக்கு மேற்பட்ட கோயில்களில் கொலுவிருக்கிறான். பெரிய காஞ்சிப் பகுதியில் விஷ்ணுவுக்கும் சிறிய காஞ்சிப் பகுதியில் சிவனுக்கும் சில சில இடங்களை விட்டுக் கொடுத்து நிரம்பவும் சௌஜன்யமாகவே வாழ்கிறார்கள், அத்தானும் மைத்துனனும். எத்தனை பேர் எத்தனை பெயர்களில் எத்தனை கோயில்களில் இருந்தாலும், தலைமைப் பதவி இவருக்குத்தான். விஷ்ணு காஞ்சியின் தலைவர் அத்திகிரி வரதர். சிவ காஞ்சியின் தலைவர் ஏகம்பன். இன்று கச்சி ஏகம்பனைப் பார்ப்பதோடு திருப்தி அடையலாம். தலைவரைக் கண்டு வணங்கி விட்டால் மற்றவர்களைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம் அல்லவா?

காஞ்சியில் இருக்கும் தெய்வங்களுக்குள் முதன்மையானவர் கச்சி ஏகம்பனே என்றாலும், கலை வளத்தாலும் சரித்திரப் பிரசித்தியாலும் ஏகம்பனுக்கு முன் நிற்பவர் கைலாசநாதரே. இந்தக் கைலாசநாதரது கோயில் பல்லவ