பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

105

கம்பன், கள்ளக் கம்பன், நல்ல கம்பன் என்ற பெயரில் லிங்கத் திரு உருவில் அமைந்திருக்கிறார்கள். இவர்களை முப்பது ஏக்கர் பரப்பிலே உள்ள இந்தக் கோயிலில் தேடிச் சென்று வணங்கி விடை பெறுவது சிரமமே.

ஆதலால் 'மாவடி வைகும் செவ்வேள்' மலரடி வணங்கிவிட்டுத் தனித்தொரு கோயிலிலே இருக்கும் ஏலவார் குழலியையும் வணங்கலாம் (ஒரு விசேஷம் - காஞ்சியில் இறைவன் எண்ணற்ற திருப்பெயர்களில் எண்ணற்ற கோயில்களில் இருந்தாலும், அங்கெல்லாம் அம்மனுக்குத் தனித்த சந்நிதி கிடையாது. காமகோட்டத்தில் கொலு விருக்கும் காமாட்சியின் சந்நிதி ஒன்றே அம்மன் சந்நிதியாகும்). இன்னும் மேலே வடக்குப் பிராகாரத்தில் நடந்தால், நம்மை வெளியே போக விட மாட்டார், நிலாத் திங்கள் துண்டப் பெருமாள்.

நீரூறும் செஞ்சடையாய்! நெற்றிக்கண்ணாய்!
நிலாத் திங்கள் துண்டத்தாய்!
நின்னைத் தேடி
ஒரூரும் ஒழியாமே ஒற்றித் தெங்கும்
உலகமெலாம் திரி தந்து,
நின்னைக் காண்டான்தேரூரும்
நெடுவிதி பற்றி நின்றேன்

என்று அப்பர் பாடலைப் படித்த நான் இத்தனைநாளும் நிலாத் திங்கள் துண்டத்தான் சிவபெருமானே என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்தப் பெருமான் நல்ல பட்டை நாமம் சாத்திக்கொண்டு, அழகான சிலை வடிவில் பெருமாளாக நிற்கிறார். மக்களில் ஒரு சிலர் ஏதோ சைவம், வைணவம் என்ற பேதம் உடையவர்களாக வாழ்கிறபோது, நிலாத் திங்கள் துண்டத்தான் ஆன சிவனே நிலாத் திங்கள்துண்டத்தான் ஆன விஷ்ணுவாக இந்த ஏகம்பன் கோயில் உள்ளே நிற்பது வியப்பிலும் வியப்புதானே!