பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

109

அன்னையைத்தான் பழையோள், பராசக்தி என்று போற்றியிருக்கிறார்கள். ஆதியில் தோன்றிய அன்னை பராசக்தி, பின்னர் தோன்றிய தேவர் மூவரினும் ஆற்றல் மிகுந்தவள் என்று நம்பியிருக்கிறார்கள். இந்தப் பராசக்தியே காஞ்சி காமாக்ஷியாகத் தமிழர்கள் உள்ளத்தில் உருவாகி இருக்கிறாள், எத்தனையோ வருஷங்களுக்கு முன்பாகவே.

காஞ்சிகாமாக்ஷி, மதுரைமீனாக்ஷி, காசிவிசாலாக்ஷி மூவரும் அவர்தம் அருள் நோக்காலேயே மக்கள் வேண்டுவன எல்லாம் தரவல்லவர்கள். மதுரை மீனாக்ஷி, பாண்டியன் மகளாகப் பிறந்து, மானிடப் பெண்ணாக வளர்ந்து, அரசியாக அரியனை ஏறியவள். ஆகவே அவளுக்கு இரண்டே கைகள். செண்டேந்திய திருக்கரம் ஒன்று, ஒயிலாகத் தொங்கவிடப்பட்ட கரம் மற்றொன்று.

ஆனால் அன்னை காமாக்ஷிக்கோ கரங்கள் நான்கு, அவள் தன் தெய்வத்தன்மையை விளக்க. சாதாரணமாகக் கோயிலில் உள்ள அம்பிகைகளுக்கு நான்கு கரங்கள் இருந்தால், அவற்றில் ஒன்று வரத முத்திரையோடும், ஒன்று அபய முத்திரையோடும் அமைந்திருக்கும். ஆம். அபயம் அருளுவதோடு, வாரி வழங்கும் வரதம் உடையவள் அல்லவா அவள்? ஆனால் காஞ்சி காமாக்ஷியோ கரங்கள் நான்கிருந்தும், அதில் வரதமும் காணோம், அபயமும் கானோம். அவளோ பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், சதாசிவன் முதலிய பஞ்ச பிரமாக்களையே தனக்கு ஆசனமாகக் கொண்டு, அவ்வாசனத்தில் பத்மாசனமிட்டு உட்கார்ந்திருக்கிறாள் என்பர். நான்கு கைகளிலும் பாசம், அங்குசம், புஷ்ப பாணம், கரும்பு வில் முதலியவற்றையே தாங்கி இருக்கிறாள். ஆம். அவள் அருள் புரிவதெல்லாம் மீனாக்ஷியைப் போலக் கண்களின் மூலமாகத்தான். மூன்று கண்களுடன் காமேசுவரி, லலிதை, ராஜேசுவரி, திரிபுரை, ஸ்ரீ சக்ரநாயகி என்னும் பல திருப்பெயர்கள் பெற்று விளங்குகிறாள்.