பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

வேங்கடம் முதல் குமரி வரை

வைகுண்டநாதன் பரம பதத்தில் வீற்றிருக்கும் திருக்கோலம், பாலாழியில் அறிதுயில் கொள்ளும் நிலை எல்லாவற்றையும் காண வேண்டுமானால் இந்தக் கோயிலுக்குள் நுழைய வேணும். இது தவிர பல்லவ மன்னர் சரித்திரப் பரம்பரையைப் பற்றி ஆராய்ச்சி பண்ண விரும்புபவரும், இக்கோயிலுள்நுழைந்து உள் பிராகாரத்தை ஒரு சுற்றுச் சுற்றினால், கல்லிலே உருவாகியிருக்கும் சரிதையையே தெரிந்து கொள்ளலாம், எளிதாக.

இன்று நாம் காண இருப்பது இந்த இலக்கியப் பிரசித்தி பெற்ற யதோத்காரியையும் அல்ல, சரித்திரப் பிரசித்தி பெற்ற வைகுண்டப்பெருமாளையும் அல்ல. இருவருக்கும் மேலான அருளாளனாக வரப்பிரசித்தியுடைய வரதரைக் காணத்தான் இவ்வளவு தூரம் நடந்து வந்திருக்கிறோம். காஞ்சியில் உள்ள விஷ்ணு கோயில்களி லெல்லாம் பெரிய கோயில் இந்த வரதராஜப் பெருமாள் கோயில்தான். ஆம். அவன் அத்திகிரி என்னும் மலை மேலேயல்லவா ஏறிக்கொண்டு நிற்கிறான்.

படைப்புத் தொழில் புரியும் பிரமனுக்கு மறதி ஏற்படுகிறது. ஞாபக சக்தி குறைகிறது (சரிதான். அப்படி அவர் ஞாபக சக்தி இழந்திருந்த காலத்தில் செய்த படைப்புகளே கால் இல்லாமலும், கை இல்லாமலும், தலை இல்லாமலும், ஏன் - மூளை இல்லாமலும் பிறக்கும் பிறவிகள் போலும்). பிரமனே இதைப் போக்கிக் கொள்ள ஒரு யாகம் செய்கிறான். யாக குண்டத்திலிருந்து எழுந்த புண்ணிய கோடி விமானத்தில் தேவராஜனான வரதன் தோன்றிப் பிரமனுக்குள்ள மறதியைப் போக்குகிறான். அன்று பிரமனுக்குக் காட்சி கொடுத்த கோலத்திலேயே தங்கி விடுகிறார், இந்தத் தலத்திலே,

திசை யானைகள் பூஜித்த தலம் ஆனதனால், அத்திகிரி என்று பெயர் பெற்றது என்பர் ஒரு சாரர். இல்லை, ஐராவதம் என்ற தேவேந்திரனது யானையின் மீது ஏறி நின்று தரிசனம் கொடுத்ததால், அத்தியூர் என்று வழங்கப்படுகிறது என்பர்