பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
14. ஊறல் அமர்ந்த உமாபதி

காவிரி நதியிலே மைசூரை அடுத்த கண்ணம்பாடியில் கட்டப் பட்டுள்ள அணை கிருஷ்ணராஜ சாகரம். இந்த அணைக்கட்டை விட, அங்கு இன்றைய இஞ்சினியர்கள் சமைத்திருக்கும் பிருந்தாவனம் என்னும் வண்ணப் பூங்கா அழகானது. இரவு நேரத்தில் அங்குள்ள தண்ணீரை வான் நோக்கி எழும் வண்ணத் தாரைகளாக்கிப் பல வர்ண ஜாலங்களையே செய்திருக்கிறார்கள். இதுதான் பூலோக சுவர்க்கமோ என்னும்படி அத்தனை இன்பம் காண்பவர்களுக்கு.

கண்ணனும் ராதையும் பளிங்குத் திருவுருவில் நிற்கிறார்கள் ஒரு புறத்தே. வழிந்தோடும் தண்ணீருக்குள் எல்லாம் வண்ண வண்ண விளக்குகள். விசிறி எழுந்து பரவும் குழாய் நீரில் எல்லாம் வானவில்லின் அதிசயங்கள். இத்தனை கோலாகலத்தையும் தூக்கி அடிக்கும் காட்சி ஒன்று உண்டு அங்கே. அதுதான் காவிரித் தாயின் திருவுருவம். அணைக்கட்டிலிருந்து பிருந்தாவனத்துக்கு இறங்கும் வழியிலே அமைத்திருக்கிறார்கள்.

காகங் கவிழ்த்த கரகத்தை ஏந்தியவளாய் நிற்கிறாள் அவள், ஒரு மாடத்திலே. அந்தக் கரகத்திலிருந்து அளவான தண்ணீர் இடைவிடாமல் வழிந்து கொண்டே இருக்கிறது. காவிரி அன்னை ஏந்தி நிற்கும் குடம் வற்றாத பாத்திரமாக இருப்பது அழகாக இருப்பதோடு, அரிய கற்பனையாகவும் இருக்கிறது. இவ்வளவு பெரிய அணைக்கட்டில் தண்ணீரைத் தேக்கியதில் வியப்பில்லை. ஆனால், அந்த அணைக்கட்டின் சுவரிலே ஒரு மாடம் அமைத்து, அதில் காவிரித்தாயை நிறுத்தி, அவள் கையில் ஒரு கரகத்தையும் கொடுத்து, அந்தக் கரகத்திலிருந்து அளவான தண்ணீர் இடைவிடாது விழ வகை