பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

வேங்கடம் முதல் குமரி வரை

அங்கு செல்ல வேணுமே. ஆதலால், உன் கோயில் பிரதிஷ்டையை இன்னொரு நாளைக்கு மாற்றி வைத்துக் கொள்ளேன்' என்று சொல்கிறார்.

இதைக் கேட்டு ராஜசிம்மன் விலவிலத்துப் போகிறான். 'ஸ்வாமி! அப்படி என்னுடைய கோயிலை விடப்பெரிய தொக கோயிலை எங்கே யார் கட்டியிருக்கிறார்கள்?' என்று மிக்க ஆதங்கத்தோடு கேட்கிறான்.

கனவில் வந்த கைலாசநாதரும், 'அதுவா, பக்கத்தில்தான். திருநின்ற ஊரிலே பூசலார் என்ற அன்பன் கட்டியிருக்கிறான்!' என்று சொல்லி மறைந்து விடுகிறார்.

அவ்வளவுதான். மன்னன் எழுகிறான். மந்திரி பிரதானிகளை யெல்லாம் அழைக்கிறான். கேள்வி மேல் கேள்வி கேட்கிறான். எல்லோருமே பூசலார் கட்டிய கோயிலைப் பற்றி அறிய முடியவில்லை . ஆதலால் உடனே புறப்படுகிறான், ராஜசிம்மன் - திருநின்ற ஊரை நோக்கி. மந்திரி, மக்கள் எல்லோருமே அரசனைத் தொடர்ந்து செல்கிறார்கள்.

பலபல என்று விடிகிறபோது திருநின்ற ஊரில் வந்து சேருகிறார்கள். அங்கே கோயில், பிரதிஷ்டை. என்ற ஆர்ப்பாட்டம் ஒன்றையும் காணோம். ஊர் மக்களிடம் விசாரித்தால், 'பூசலாரா? அந்தக் கிழமா கோயில் கட்டியிருக்கிறது?' என்று ஏளனமாகவே பேசுகிறார்கள். திரும்பவும் கேட்டால், 'அவரா ,அவர் ஊருக்கு மேற்கே உள்ள குளக்கரையில் உட்கார்ந்திருப்பார்!' என்கிறார்கள்.

விரைந்து சென்றால், அங்கே ஒரு மரத்தடியில் பூசலார் பதும் ஆசனத்தில் யோக நிலையில் அமர்ந்திருக்கிறார். அவரை அணுகி, 'பெரியவரே! பெரியவரே! நீர் கட்டியிருக்கும் கோயில் எங்கே?' என்று கேட்கிறான், ராஜசிம்மன். அவரோ, 'என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள். நான் கட்டிய கோயிலில் இப்போது தான் பிரதிஷ்டை நடந்து கொண்டிருக்கிறது!' என்கிறார்.