பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
17. முல்லை வாயில் நாதன்

ண்டைத் தமிழ் நாட்டு வள்ளல்களில் பிரபலமானவன் வேள்பாரி. பல வளங்கள் உடையதும் முந்நூறு ஊர்களைக் கொண்டதுமான பறம்பு மலையிலிருந்து ஆட்சி செலுத்திய சிற்றரசன் அவன். வேளிர் குலத் தலைவனான இப்பாரி வரையாது கொடுக்கும் வள்ளல். பாடி வந்த புலவர்களெல்லாம் முந்நூறு ஊரையும் பரிசிலாகவே பெற்றுச்சென்று விடுகின்றனர். மிஞ்சியது குன்று ஒன்றுதான்.

இப்பாரியின் புகழைக் கேட்ட தமிழ் தாட்டு மூவேந்தர் இவனிடம் தீராப் பகைமை கொள்கின்றனர். வள்ளல் பாரி நல்ல வீரனும் கூட. ஆதலால் அவனைப் போரில் வெல்வது என்னவோ இயலாத காரியமாக இருக்கிறது, அவர்களுக்கு. இந்தப் பாரியை வெல்ல அவர்கள் கண்ட ஒரே வழி பாடும் பாணர்களாக வேஷமிட்டு வந்து பரிசிலாகக் குன்றைப் பெறுவதுதான். குன்றைக் கைக் கொண்டதோடு, வஞ்சனையால் பாரியையுமே கொன்று விடுகின்றனர், மூவேந்தரும் சேர்ந்து.

இத்தகைய பாரியின் கொடைத் திறனை விளக்க ஒரு சிறு கதை உண்டு. ஒரு நாள் வேள்பாரி தேரிலே ஏறிக்கொண்டு காட்டுக்குச் செல்கிறான். திரும்பம்பொழுது வழியில் முல்லைக் கொடி ஒன்றைப் பார்க்கிறான். அக்கொடி பற்றிப் படர்வதற்குக் கொம்பு ஒன்றில்லாமல் துவண்டு விழுவதைக் காண்கின்றான்.

இதைக் கண்ட பாரியின் உள்ளத்தில் ஒரு கருணை பிறக்கிறது. துவளும் முல்லைக் கொடிக்குத்தான் ஊர்ந்து வந்த தேரையே கொழு கொம்பாக நிறுத்திவிட்டு நடந்தே திரும்புகிறான், தன் அரண்மனைக்கு. முல்லைக் கொடிக்கே இத்தனை கருணை காட்டியவன் என்றால், அவன் கொடைத்