பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

வேங்கடம் முதல் குமரி வரை

திறனைப் பற்றி விவரிப்பானேன்! இந்தப் பாரியின் உயிர்த் தோழர் புலவர் பெருமகனான கபிலர். அவர் பாடுகிறார், இவன் முல்லைக்குத் தேர் அளித்த செயலைக் குறித்து.

பூத்தலை அறாஅப் புனைகொடி முல்லை
நாத்தழும்பு இருப்ப பாடாதாயினும்
கறங்குமணி நெடுந்தேர்
கொள் கெனக் கொடுத்த
பரந்தோங்கு சிறப்புடை பாரி

என்று கபிலரால் பாரியும், பாரியால் முல்லைக் கொடியும் பிரசித்தி பெற்று விடுகின்றனர்.

இதை விடப் பெரிய சமயப் பிரசித்தியே பெறுகிறது, மற்றொரு முல்லைக் கொடி. அந்தக் கொடி காரணமாக ஒரு கோயிலே உருவாகிறது. கோயிலைச் சுற்றி ஒரு கிராமமும் எழுகிறது. அப்படி எழுந்த கோயில் தான் மாசிலாமணி ஈசுவரர் கோயில்.

இத்தலத்தின் வரலாற்றை அறிய வேண்டாமா? சோழ மன்னனான கிள்ளி வளவனுக்கும் நாக கன்னிகையான பீலிவளைக்கும் பிறந்தவனே தொண்டையர் குலத் தோன்றலான ஆதொண்டைச் சக்கரவர்த்தி. சோழமன்னன் தன் நாட்டை இரு கூறாக்கித் தென்பகுதியைச் சோழனுக்கும், வடபகுதியை ஆதொண்டைக்கும் பகிர்ந்து கொடுக்கிறான்.

இந்தத் தொண்டைமான் சக்கரவர்த்தி காடு வெட்டி நிலம் திருத்தி அங்கிருந்த குறும்பர் குறும்படக்கித் தொண்டை மண்டலத்தையே உருவாக்குகிறான். காஞ்சியிலிருந்து புழல் கோட்டத்துக் குறும்பர் தலைவனை அடக்கப் புறப்படுகிறான். படைகள் பின் நடந்து வர இவன் யானைமீது ஆரோகணித்து முன்னே செல்கிறான்.