பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

வேங்கடம் முதல் குமரி வரை

முல்லைவாயில். இந்தத் திருமுல்லைவாயில் நாதனை ஆளுடை நம்பியாம் சுந்தரர் விளக்கமாகவே பாடுகிறார்.

சொல்லரும் புகழான் தொண்டைமான் களிற்றைச்
சூழ்கொடி முல்லையால் கட்டிட்டு
எல்லையில் இன்பம் அவன் பெற வெளிப்பட்டு
அருளிய இறைவனே என்று
நல்லவர் பரவும் திருமுல்லை வாயில்
நாதனே நரை விடை ஏறி!
பல்கலைப் பொருளே! படுதுயர்களையாய்
பாசுபதா! பரஞ்சுடரே!

இப்படிச் சுந்தரர் திட்டவட்டமாகக் கூறியிருந்தும், இக்கதைக்கு வேறு இரண்டு பாடங்களும் ஏற்பட்டிருக் கின்றன. சுந்தரர் பாடிய ஊர் வட திருமுல்லைவாயில். அவர் சொல்லும் கதையில் தொண்டைமான் களிற்றை முல்லைக் கொடி சுற்றிக் கொள்கிறது.

இதே கதையை இதே வடதிரு முல்லை வாயில் தலத்துக்கே ஏகாம்பரநாதர் உலா பாடிய இரட்டையர்களும் ஏற்றுகிறார்கள், ஒரு சிறு மாறுதலுடன். யானைக்குப் பதிலாக இவர்கள் குறிப்பது தேரை.

மல்லல் தொடைத் தொண்டைமான்
கடவும் தேரை ஒரு முல்லைக்கொடி தடுத்தமூதூர்!

என்பது அவர்கள் சொல்லும் பாடம். இன்னும் முல்லை வாயில் என்ற பெயரிலேயே சோழநாட்டிலே, சம்பந்தர் பிறந்த சீகாழிக்குக் கிழக்கே ஒன்பது மைல் தூரத்தில் கடற்கரையில் ஓர் ஊர் இருக்கிறது. அதைத் தென் திருமுல்லைவாயில் என்கிறார்கள்.