பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

167

கொடுப்பதெல்லாம் இப்போது நிறுத்தப்பட்டிருக்கிறது என்று அறிகிறோம். அங்குதரும் குங்குமப் பிரசாதத்தையும் பெற்றுக் கொண்டு திரும்பலாம், வந்த வழி நோக்கி.

இத் தலம் சம்பந்தர் காலமாகிய கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்தே பிரசித்தியடைந்திருக்கிறது. கோவிலில் திருவிளக்குத் தொண்டு செய்த கலிய நாயனாரது அவதார ஸ்தலம் இது. பல சோழ மன்னர்கள் இக்கோயிலைக் கட்டவும், இக் கோயிலில் வழிபாடுகள் நடக்கவும், போதிய நிலபுலன்களை மான்யமாக விட்டிருக்கிறார்கள்.

கோயிலில் பல உற்சவங்கள் சிறப்பாக நடைபெற்றிருக்கின்றன. அவைகளை யெல்லாம் நடத்தி வைக்கச் சோழ மன்னர்களே இவ்வூருக்கு வந்திருக்கிறார்கள். இரண்டாம் ராஜராஜன் தான் பட்டத்துக்கு வந்த ஒன்பதாம் ஆண்டிலே இக் கோயிலில் நடந்த பங்குனி உத்தர உத்சவத்துக்கு நேரில் வந்திருந்தான் என்று கோயிலின் இரண்டாவது பிராகாரத்தின் கிழக்குச்சுவரில் உள்ளகல்வெட்டு ஒன்று கூறுகிறது.

இவனுக்குப் பின்னால் பட்டத்துக்கு வந்த மூன்றாம் குலோத்துங்கனும் இங்கு வந்து ராஜ ராஜன் திரு மண்டபத்திலிருந்து ஆனி உற்சவம் பார்த்தான் என்றும், அங்கு ஒரு தர்பாரே நடத்தினான் என்றும் வரலாறு.

இப்படியெல்லாம் சோழ மன்னர்களால் பாராட்டப்பட்ட இக்கோயில் ஒரு பெரிய கலைக் கழகமாகவே விளங்கி யிருக்கிறது, அந்நாளில். இலக்கணம், தர்க்கம், கலை ஞானம் எல்லாம் இங்கே கற்பிக்கப்பட்டிருக்கின்றன. ராஜேந்திர சோழன் பெயராலும், குலோத்துங்க சோழன் பெயராலும் ஏற்பட்ட மடங்களில் எல்லாம் நல்ல உணவு அளிக்கப்பட்டிருக்கிறது. இப்படித் தமிழ் பரப்பவும் கலை வளர்க்கவு ஒரு நல்ல கலைப் பள்ளியாகவே இருந்திருக்கிறது இத்தலம்.