பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
19. அல்லிக்கேணி அழகன்

பார்த்தனுக்கு அன்று கண்ணன் செய்த கீதை உபதேசம், பாரில் உள்ள மக்களுக்கு எல்லாம் இன்று பயன்படுகிறது. பலன் கருதாது உன் கருமத்தைச் செய்யக் கற்றுக்கொள் என்று கீதாசாரியனான கண்ணன் பார்த்தனுக்குக் கூறியிருக்கிறான், அன்று. கீதோபதேசம் செய்ய நேர்ந்த சந்தர்ப்பம் பாரதக் கதையிலேயே ஓர் அழகான கட்டம். அதைக் கீதையிலேயே விரிவாகக் குறிப்பிட்டிருந்தாலும், ரத்தினச் சுருக்கமாக அழகான வெண்பாக்களில் கூறுகிறார், பாரதம் பாடிய பெருந்தேவனார்.

குரு க்ஷேத்திரத்திலே பாண்டவர் படையும் கௌரவர் படையும் அணி வகுத்து நிறுத்தப் பட்டிருக்கின்றன. அப்போர்க்களத்துக்கு அர்ச்சுனன் வருகிறான், தேரூர்ந்து. தேரை நடத்துபவன் கண்ணன். பாண்டவரில் ஒருவனான அர்ச்சுனன், எதிர்ப் பக்கத்தில் இருக்கும் உறவினர்களையும் படை வீரர்களையும் பார்த்தவுடனே, இத்தனை பேர்களையும் கொன்று குவித்துத் தான் நாடாட்சி செய்ய வேண்டும் என்றால், அந்த அரசு அவசியம் வேண்டியதுதானா என்று எண்ணுகிறான். உள்ளத்தில் ஒரு சோர்வே ஏற்படுகிறது, அவனுக்கு. கையில் உள்ள வில் நழுவுகிறது. தேர்த்தட்டின் மீதே திகைத்து இருக்கிறான்.

உற்றாரை எல்லாம் உடன்கொன்று அரசாளப்
பெற்றாலும் வேண்டேன் பெருஞ்செல்வம் - சொல்தாழ்ந்து
வாள்தடக்கை வில்நெகிழ வாளா இருந்திட்டான்
தேர்த்தட்டின் மீதே திகைத்து

என்று ஆரம்பிக்கிறார், பெருந்தேவனார்.

பூபாரம் தீர்க்கப் பிறந்த புயல் வண்ணனான கண்ணன் இந்த நிலையில் பார்த்தனைப் பார்க்கிறான். அவனுக்குக்