பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

வேங்கடம் முதல் குமரி வரை

கீதோபதேசமே செய்கிறான். 'இவ்வுலகில் ஒவ்வொரு மனிதனும் தான் செய்யும் காரியங்களுக்குத் தானே கர்த்தா என்று எண்ணிக் கொள்வதனால்தானே இத்தனை மனக்கஷ்டம்! ஆக்கி காத்து அழிப்பவன் இறைவன், ஆதலால் செய்யும் காரியங்களை யெல்லாம் அவனே செய்கிறான் என்று மட்டும் எண்ணத் தெரிந்து விட்டால், எவ்வளவு கஷ்டங்கள் மனிதன் மனத்தில் இருந்து நீங்கிவிடும்! மேலும், கருமங்கள் செய்வதும் அப்படிச் செய்யும் கருமங்களின் பலாபலன்களைச் சிந்திப்பதும் மனிதன் செய்ய வேண்டிய செயல் அல்லவே. பலன் கருதாது பணி செய்ய மனிதன் கற்றுக் கொள்ள வேண்டும். ஆதலால் பார்த்தா! நீ உன் கருமத்தைச் செய். பலாபலன்களைச் சிந்தியாதே!' என்று உபதேசிக்கிறான், பார்த்தசாரதியானகண்ணன்.

அப்படி உபதேசம் பண்ணியவன் எல்லா அண்டங்களிலும் அவனே நிறைந்திருக்கிற தன்மையை விளக்கத் தனது விசுவரூபத்தையே காட்டுகிறான். இதையுமே சொல்கிறார், பெருந்தேவனார்.

பிறப்புநிலை கேடு இவையாவன், பாவம்
அறத்தினோடு ஜம்பூதம் ஆவான் - உறற்கரிய
வானாவாள், மண்ணாவான் மன்னுயிர்கள் அத்தனையும்
தான்ஆதல் காட்டினான் தான்.

அந்த உபதேசத்தைக் கேட்டு, அந்த விசுவ ரூபத்தைத் தரிசித்த பின், பார்த்தனது மயக்கம் தெளிகிறது. போர் ஏற்கிறான். போரில் பகைவர்களையெல்லாம் வென்று வாகை சூடுவதற்குக் காரணமா யிருந்தவனும் அவன்தானே. ஆம். அந்தப் பார்த்தசாரதியாம் கண்ணன்தானே. அந்தப் பார்த்தசாரதி கோயில் கொண்டிருக்கும் இடம்தான் சென்னையின் ஒரு பகுதியான திரு அல்லிக்கேணி. அங்கு தான் செல்கிறோம் இன்று.