பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

173

இந்தக் கோயிலில் ஒரு சம்பிரதாயம், பார்த்தசாரதியைச் சேவிக்கும் முன்பே மற்றவர்களை யெல்லாம் தரிசித்துவிட வேணும் என்று. ஆகவே பார்த்தசாரதியை வலமாகச் சுற்றி, வணங்க வேண்டியவர்களை வணங்கி விடலாம். முதலில். -

சந்நிதி வாயிலிலிருந்து தென்பக்கம் திரும்பியதும் நம்மை ஆட்கொள்ள இருப்பவள் வேதவல்லித் தாயார். இவள் சர்வாங்க சுந்தரி, ஸ்ரீவைகுண்டத்தில் ஸ்ரீமந் நாராயணனோடு கூடிய மகாலக்ஷ்மி பூலோகத்தில் பிருந்தாரண்யம் என்னும் இந்தத் திரு அல்லிக்கேணிக் கரையிலே பிருகு மகரிஷியின் பர்ணசாலையருகே ஒரு சந்தன மரத்தடியிலே, பெண் மகவாகத் தோன்றுகிறாள். அவளை எடுத்து வேதவல்லியென்று பெயரிட்டு வளர்க்கிறார் பிருகு மகரிஷி.

இவள் மங்கைப் பருவம் அடைந்த பின், இவளைக் கண்டு காதலித்து மணம் புரிந்து கொள்கிறான் மந்நாதன். இவனைக் கண்டு, இவனே என் நாதன் என்று வேதவல்லி மிக்க நாணிக் கோணிக் கூறியதால், இவன் மந்நாதன் என்று பெயர் பெற்று இங்கேயே தங்கிவிடுகிறான். கொஞ்சம் சவுகரியமாகக் காலை நீட்டியே படுத்தும் விடுகிறான்.

இந்த மந்நாதனுக்கு (அரங்கநாதன் கோலத்தில் இருப்பவனுக்கு) ஒரு சந்நிதி, இக்கோயிலின் உள்ளேயே. இந்த 'ஒரு வல்லித்தாமரையாள் ஒன்றிய' சீர்மார்பனையே திருவல்லிக்கேணி வந்து, கண்டு தொழுதிருக்கிறார், பேயாழ்வார்.

இனி நாம் வணங்க வேண்டியவர் தெள்ளிய சிங்கமாம் நரசிங்கப் பெருமானையே. இவர் பார்த்த சாரதியின் கர்ப்ப கிருஹத்துக்குப் பின், மேற்கு நோக்கியவராய் யோக நிலையில் இருக்கிறார். இவர் இந்தப் பிருந்தாரண்யத்திலே அத்திரி மகரிஷிக்கும் பிரத்தியக்ஷம் ஆன அவசரத்திலே இருக்கிறார் என்பது புராண வரலாறு.