பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

வேங்கடம் முதல் குமரி வரை

நகையாக எல்லாம் அந்தக் கோயிலில் வைத்திருக்கும் பெரிய உண்டியலில் போட்டுவிட்டு, உண்டியலைச் சுற்றிவந்து நமஸ்கரித்து விட்டு, வீடு திரும்புகிறார்கள். உண்டியலில் சேர்வது மாதம் இருபது லட்சம் என்கிறார்கள்; முப்பது லட்சம் என்கிறார்கள்.

மக்களது இத்தனை நம்பிக்கைக்கும் பாத்திரமாக இருப்பவன்தான், திருப்பதியில் அந்தத் திருமலை மேல் நிற்கும் திருவேங்கடமுடையான். 'வடவேங்கடம் தென் குமரியாயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்' என்று பண்டைத் தமிழர்கள் எல்லை கட்டினார்களே, அந்தத் தமிழ் நாட்டின் வடஎல்லையில் வானுற ஓங்கி வளர்ந்த வட மாலவன் குன்றத்தின் மீதே, வான் நோக்கி நிமிர்ந்து நிற்கிறான் அவன்.

'கடன் வாங்கிக் கல்யாணம்' என்று ஒரு படம். படத்தில் வரும் நிகழ்ச்சிகளுக்கும் படத்தின் பெயருக்கும் பொருத்தம் இல்லை என்கிறார்கள் பார்த்தவர்கள், ஆனால் தமிழ் நாட்டில் கடன் வாங்கிக் கல்யாணம் பண்ணி, அந்தக் கடனை அடைக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிற பெருமகன் ஒருவர் உண்டென்றால், அவர் திருப்பதி வேங்கடாசலபதிதான். கதை இதுதான்:

வைகுண்டவாசனாக இருந்த மகா விஷ்ணு வராக அவதாரம் எடுத்து இரணியாக்ஷனை சம்ஹரித்துப் பூதேவியை அவனுடைய பிடியிலிருந்து மீட்டவர் வைகுண்டத்துக்குத் திரும்பாமல் இப் பூவுலகிலேயே நிலைத்து விடுகிறார். ஸ்ரீதேவியும் இப் பூவுலகிலே ஒரு தாமரை மலரிலே குழந்தையாக அவதரிக்கிறாள்.

குழந்தையை ஆகாசராஜன் எடுத்துப் பத்மாவதி எனப் பெயரிட்டு வளர்க்கிறான். நாராயண வனத்திலே பத்மாவதி தேவியும், அந்த நாராயணனையே கணவனாக அடையத் தவமிருக்கிறாள். வேங்கடவனாக மலைமேல் நிலைத்து நின்ற