பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
22. போரூர் முருகப் பெருமான்

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும்
பொய்ம்மை பேசாது இருக்க வேண்டும்
பெருநெறி பிடித்து ஒழுக வேண்டும்
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்

என்றெல்லாம் விண்ணப்பித்துக் கொள்கிறார், ராமலிங்க அடிகள். யாரிடம் இப்படி விண்ணப்பித்துக் கொள்கிறார் என்றால், அந்தக் கந்த கோட்டத்துக்குள் இருக்கும் கந்தவேளிடம்தான்.

கந்த கோட்டம் என்றால் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். சென்னைப் பூக்கடைக் கந்தசாமி கோயில் என்றால் எல்லோருக்கும் தெரியும். எவ்வளவோ ‘கச்சவடம்' நடக்கும் இடத்திலே கோயில் அமைந்திருந்தாலும், ராமலிங்கர் அந்தச் சென்னையை, அச்சென்னையிலுள்ள கோயிலைத் தருமமிகு சென்னை, என்றும், 'கந்த கோட்டத்துள் வளர் தவம் ஓங்கும் கந்தவேள்' என்றுமே குறிப்பிடுவார்.

இந்தக் கந்தவேளிடம் அவர் விண்ணப்பித்து வேண்டிக் கொள்ளும் வேண்டுகோளோ அனந்தம். அத்தனை வேண்டுதல்களையும் இக்கோயிலுக்குச் செல்லும் அன்பர்கள் (டிரவுசர் கோட்டோடு குல்லாவும் அணிந்தே செல்லும் அன்பர்கள்தான்) இன்றும் வேண்டிக் கொண்டே செல்கிறார்கள். கோயில் புராதனமான கோயில் இல்லை என்றாலும், பிரபலமான கோயில். அங்குள்ள மூர்த்திகள் எல்லாம்

வே.கு : 13