பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

வேங்கடம் முதல் குமரி வரை

சின்னஞ்சிறு வடிவங்கள்தான். கோயிலுள் ஒரு மாடத்தில் ராமலிங்கரையுமே பிரதிஷ்டை பண்ணியிருக்கிறார்கள்.

இக் கோயிலை விடச் சென்னையில் இன்று பிரபலமாயிருப்பது வடபழனி ஆண்டவர் கோயில்தான். பூக்கடைக் கந்தசாமி கோயில் ஏதோ இருநூறு வருஷங்களுக்குள் உருவான கோயில்தான் என்றால், சமீபத்தில் இருபத்தைந்து வருஷ காலத்துக்குள்ளேயே உருவான கோயில் கோடம்பாக்கம் வடபழனி ஆண்டவர் கோயில்.

'பால் மணக்குது பழம் மணக்குது பழனி மலையிலே' என்று பாடிக் காவடி தூக்கி ஆடியவனே, தேன் மணக்குது தினை மணக்குது தென் பழனியிலே' என்று பாடியிருக்கிறான். உடனே அந்தப் பழைய பழனியில் உள்ளவனைத் தென்பழனி ஆண்டவன் ஆக்கி, புதிதாக உருவாக்கிய முருகனை இந்தப் பட்டினத்துக்காரர்கள் வடபழனி ஆண்டவனாக ஆக்கியிருக்கிறார்கள்.

அண்ணாசாமி நாயக்கர் என்ற ஒரு பக்தர், திருத்தணிகை முருகனிடத்தும் பழனி ஆண்டவனிடத்தும் ஆறாத காதல் உடையவர். அவர் பழனி சென்றிருந்தபோது, பழனி ஆண்டவர் படம் ஒன்று வாங்கி வந்து அதைப் பூஜை செய்து வந்திருக்கிறார். பூஜை முடிந்ததும் அவருக்கு ஆவேசம் வருவதுண்டாம். அப்போது அவர் என்ன சொன்னாலும் அது அப்படியே நடக்க ஆரம்பித்திருக்கிறது.

இந்த நிலையில் பிரபல வியாபாரியான இரத்தினவேல் செட்டியார் இவருடைய சிஷ்யர் ஆகியிருக்கிறார். அவரும் துறவு பூண்டு, அண்ணாசாமி நாயக்கருடன் சேர்ந்து வழிபட்டிருக்கிறார். அவர் மிகக் குறைந்த முப்பத்தைந்து ரூபாய் செலவிலே ஒரு சிற்பியைக் கொண்டு பழனி ஆண்டவர் திரு உரு ஒன்றைச் செய்து வைத்திருக்கிறார்.