பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

197

தேவியாரையும் வெளிக் கொணர்ந்து வணங்கியிருக்கிறார். நோய் தவிர்த்தல் முதலிய அற்புதங்களை இந்தச் சிதம்பர சுவாமிகள் செய்ய, அதனால் பக்த கோஷ்டிகள் பெருகியிருக்கிறார்கள். திண்டிவனத்தை அடுத்த கிளியனூரிலிருந்து ஓர் அம்மையார் தாம் அரும்பாடு பட்டுத் தேடிய பொன் ஒன்றைச் சமர்ப்பிக்க, அதோடு சென்னைப் பாளையத்தா செட்டியார் என்பவர் கொண்டு வந்து கொடுத்த இரண்டு பை வராகன்களையும் வைத்துக் கொண்டு, திருப்பணி ஆரம்பித்துக் கோயிலைச் சிறப்பாகக் கட்டி முடித்திருக்கிறார், திருக்குளம் வெட்டி யிருக்கிறார். உற்சவாதிகள் நடத்த வேண்டிய ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார்.

அன்று பரம்பரை பரம்பரையாக நாட்டை ஆண்ட அரச பெருமக்கள் செய்த சீரிய பணியையே முருகன் அருள் கொண்டு ஓர் ஏழைத் துறவி சிறப்பாகச் செய்திருக்கிறார் என்றால், அது வியப்புக்கு உரியது தானே.

இந்தக் கோயிலுக்குள் செல்லுமுன், பக்கத்திலே மலைமேல் உள்ள கைலாச நாதரையும் அவர் துணைவி பாலாம்பிகையையும் தரிசிக்கலாம். அம் மலை ஏறுமுன், வேம்படி விநாயகர் வேறே வழியை மறிப்பார். இவர்களை பிரணவம் யெல்லாம் வணங்கிய பின்பே முருகனைத் தரிசிக்கப் போகவேணும்.