பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

வேங்கடம் முதல் குமரி வரை

வரும்போது நிறைந்த ஸ்ரீதனம் எல்லாம் கொண்டு வந்திருக்கிறாள். அவள் கொண்டு வராத பண்ட பாத்திரமோ, தட்டு முட்டோ இல்லை. என்றாலும் ஒரே ஒரு பொருள் - மிகவும் அற்பமானதுதான் - அதுதான் கருவேப்பிலைக் கொத்து ஒன்று கொண்டு வர மறந்துவிட்டாளாம். அதற்காக மணமகன் அவளைவிரட்டி அடித்து விட்டார். அவளும் வீம்பு குறையாமல் தன் பிறந்தகத்துக்கு வந்து அன்று தங்கியவள்தான். புருஷன் வீட்டுக்குத் திரும்பவே இல்லை.

ஆனால் புருஷனுடைய வீராப்பு எத்தனை நாளைக்கு? இப்போதோ ஒவ்வொரு இரவிலும் ஆசாமி மலையிலிருந்து இறங்கி, மனைவியின் மனைக்கே நடக்கிறார். விடிவதற்குள் திரும்பியும் விடுகிறார். யதாஸ்தானத்துக்கு. மனைவியுடன் பிணங்கிக் கொண்டதன் பலன் வேங்கடேசனுக்குச் செருப்பு தேய்கிறது.

இப்படி யெல்லாம் பக்தர்கள், அதிலும் பெண்மணிகள் எல்லாம் பேசிக் கொள்வது நம் காதில் விழும் - திருப்பதி திருமலை செல்லும் வழியில். ஆனால் இப்படி இவர்கள் மலை மேல் ஒருவரும், நிலத்தில் ஒருவருமாகத் தனித்திருப்பதற்கு ஒரு காரணம் தோன்றுகிறது, எனக்கு. வேங்கடவனுக்கும் அலர்மேல் மங்கைக்கும் ஒரு போட்டி. பக்தர்களுக்கு அருள் புரிவதிலே அப்பனை விட, அன்னை அருள் மிகுந்தவளல்லவா? ஆதலால், அவள் அவசரம் அவசரமாக இறங்கி ஓடி வந்து பக்தர்களை எதிர்கொண்டு அருள்புரிவதிலே முந்திக் கொள்கிறாள் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது, எனக்கு.

இந்தத் திருவேங்கடமுடையானது திருப்பதி இன்று மூன்று பிரிவாக இருக்கிறது. அலர்மேல்மங்கைத் தாயார் கோயில் கொண்டிருக்கும் திருச்சானூர்; கோவிந்தராஜன் திருக்கோயில் இருக்கும் கீழைத் திருப்பதி; வேங்கடவன் நின்ற திருக்கோலத்தில் காட்சி கொடுக்கும் திருமலை.